Published : 01 Feb 2021 03:21 PM
Last Updated : 01 Feb 2021 03:21 PM

தமிழக அரசின் விருதுகள்: பல்வேறு துறை சார்ந்த 77 பேருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்பிற்கும், ஊடகங்களுக்கும் மொத்தம் 77 விருதுகளை தலைமைச் செயலத்தில் முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:

“மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வந்தார். அவ்வகையில், அவர் வழியில் செயல்படும் தமிழக அரசு, திருவள்ளுவர் திருநாள் விருதுகளாக 2021-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது வைகைச்செல்வனுக்கும், 2020-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது தமிழ்மகன் உசேனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அ. அருணாச்சலத்துக்கும் வழங்கப்பட்டன. பேரறிஞர் அண்ணா விருது மறைந்த கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனனுக்கு வழங்கியதில் அவரின் சார்பில் அவரது மகன் குடியரசு ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.

பெருந்தலைவர் காமராசர் விருது ச.தேவராஜுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவுமதி (எ) மதியழகனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வி.என்.சாமிக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் வீ. சேதுராமலிங்கத்துக்கும் தமிழக முதல்வர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக 2020-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு, விருதிற்கான தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி, அச்சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் மற்றும் இணைச் செயலாளர் வி.ஜி.பி. ராஜாதாஸ் ஆகியோரிடம் வழங்கி கௌரவித்தார்.

கபிலர் விருது செ.ஏழுமலைக்கும், உ.வே.சா விருது கி.ராஜநாராயணனுக்கும், கம்பர் விருது எச்.வி. ஹண்டேவுக்கும், சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தனுக்கும், உமறுப் புலவர் விருது ம.அ. சையத் அசன் (எ) பாரிதாசனுக்கும், ஜி.யு.போப் விருது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசு சார்பாக அவரது மகன் தேசிகனிடமும், இளங்கோவடிகள் விருது வைத்தியலிங்கனுக்கும், அம்மா இலக்கிய விருது முனைவர் தி.மகாலட்சுமிக்கும் வழங்கப்பட்டது.

சிங்காரவேலர் விருது அழகேசனுக்கும், மறைமலையடிகளார் விருது மறை தி. தாயுமானவனுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் கோ.ப.செல்லம்மாளுக்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் ஊரன் அடிகளுக்கும், காரைக்கால் அம்மையார் விருது முனைவர் மோ. ஞானப்பூங்கோதைக்கும், 2019ஆம் ஆண்டிற்கான முதல்வர் கணினித் தமிழ் விருது சே.ராஜாராமனுக்கும் முதல்வர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2020-ம் ஆண்டிற்கான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் விருதான தேவநேயப் பாவாணர் விருதினை சிவமணிக்கும் தமிழக முதல்வர் வழங்கியதோடு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2020ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை மறைந்த சேசாச்சலம் சார்பில் அவரது மகன் கோபிநாத் அவர்களிடமும், முனைவர் குருநாதன், ப.குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ஜோதிர்லதா கிரிஜா, ஜெ.ராம்கி (எ) ராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத் ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக 2020-ம் ஆண்டிற்கான இலக்கிய விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க்குக்கும், மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுப. திண்ணப்பன் சார்பில் அவரது மகள் இன்பமணி தமிழ்நாடு முதல்வர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2020-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் சென்னை மாவட்டத்திற்கு கருப்புசாமிக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வேணு புருஷோத்தமனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சதாசிவத்துக்கும், வேலூர் மாவட்டத்திற்கு அக்பர் கவுஸர், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முருககுமரனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெங்கடேசனுக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கு பரிக்கல் சந்திரனுக்கும், கடலூர் மாவட்டத்திற்கு ராஜாவுக்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரனுக்கும், அரியலூர் மாவட்டத்திற்கு சிற்றரசுக்கும், சேலம் மாவட்டத்திற்கு பொன்.சந்திரனுக்கும், தருமபுரி மாவட்டத்திற்கு பெரு.முல்லையரசுவுக்கும், ஈரோடு மாவட்டத்திற்கு செங்கோட்டையனுக்கும், கரூர் மாவட்டத்திற்கு கார்த்திகா, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு எம்.ஜி. அன்வர் பாட்சாவுக்கும் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திற்கு துரை அங்குசாமிக்கும், நீலகிரி மாவட்டத்திற்கு பிரபுவுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சோம வீரப்பனுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்)க்கும், சிவகங்கை மாவட்டத்திற்கு சேதுராமனுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பழ.மாறவர்மனுக்கும், திருவாரூர் மாவட்டத்திற்கு ராம. வேல்முருகனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மா.கோபால்சாமிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆ. முனியராஜுக்கும், மதுரை மாவட்டத்திற்கு, போ.சத்தியமூர்த்திக்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு தியாகராசனுக்கும், தேனி மாவட்டத்திற்கு கருணைச்சாமிக்கும், விருதுநகர் மாவட்டத்திற்கு கவிஞர் சுரா (எ) ராமச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு செந்தில் நாயகத்துக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு காமராசுக்கும் (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இலாசருக்கும் (முளங்குழி பா. இலாசர்), திருப்பத்தூர் ச.சரவணனுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நந்திவரம் பா.சம்பத் குமாருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கவிஞர் பனப்பாக்கம் கே. சுகுமாருக்கும், தென்காசி மாவட்டத்திற்கு நாராயணனுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உதியனுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துரை குணசேகரனுக்கும் முதல்வர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2020 - 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், "தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட திருக்குறள் அரபு மொழிபெயர்ப்பு நூல் உலக அளவில் மாபெரும் அங்கீகாரத்தையும், தமிழின் பெருமையை உயர்த்துவதாகவும் அமைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு திருக்குறள் அரபு மொழியில் இசையுடன் ஒலிப்பதிவு செய்து வெளியிடப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை பேராசிரியர் முனைவர் ஜாகீர் உசேனால் திருக்குறள் அரபு மொழியில் இசையுடன் ஒலிப்பதிவு செய்து தயாரிக்கப்பட்ட ‘திருக்குறள் அரபு - இசைக்குறள் தகடு’ தமிழகம் முதல்வர் வெளியிட, ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x