Published : 01 Feb 2021 01:49 PM
Last Updated : 01 Feb 2021 01:49 PM
விழுப்புரம் அருகே முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்த கிராமப் பள்ளிக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி செய்துள்ளது அப்பகுதி மக்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஞ்சமின். இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தன்னுடைய கிராமத்துக்கும் தான் படித்த பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களுடன் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் 8 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்ததுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.
இது தவிர்த்துக் கடந்த 15 ஆண்டுகளாகவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், பழங்குடியினப் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய சமூக ஆர்வலர் பெஞ்சமின், ''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே கக்கனூர் கிராமம்தான். 5-ம் வகுப்பு வரை அங்குள்ள, புனித மலர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் படித்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பு அனைத்தையும் 1970களில் அரசு கல்வி நிறுவனங்களில்தான் முடித்தேன்.
அந்தக் காலகட்டத்தில் வறுமை, குடும்பச் சூழல், விழிப்புணர்வின்மை, அருகில் பள்ளிகள் இல்லாமை ஆகியவற்றால் ஏராளமான மாணவர்கள் 8-ம் வகுப்பையே தாண்டவில்லை. இதுகுறித்துப் பின்னாட்களில் யோசிக்க ஆரம்பித்தேன். இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்து, அமெரிக்க அரசாங்கத்திடம் பணியாற்ற, எனக்குக் கல்வியே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
என்னை வளர்த்த, உருவாக்கிய தாய்நாட்டுக்கு, என் மண்ணுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். குறிப்பாக என் கிராமத்துக் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய ஆசைப்பட்டேன். இதுகுறித்து நண்பர்களிடம் பேசினேன்.
25 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருப்பதால் எனக்கு ஏராளமான வெள்ளை, கறுப்பின, ஸ்பானிய, இந்திய நண்பர்கள் உள்ளனர். அவர்களின் உதவியுடன் ரூ.1.5 கோடி திரட்டி, கக்கனூர் பள்ளிக்கு அளித்தேன். இதில் என்னுடைய பங்கு ரூ.60 லட்சம். திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால் அதிக அளவில் நிதியைத் தந்து உதவ முடிகிறது.
கக்கனூர் புனித மலர் அரசு உதவி பெறும் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக உள்ளது. 10-ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் படிக்க, பல கி.மீ. தூரம் பயணித்து கெடார் அல்லது விழுப்புரம் செல்ல வேண்டியுள்ளது. தினந்தோறும் பயணத்திலேயே அவர்களின் ஆற்றல் செலவாகி விடுகிறது. பெண் குழந்தைகளின் கற்றல் தடைப்படுகிறது. இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினால் இவை தவிர்க்கப்படும். இதற்காகவே நிதியுதவி அளித்துப் பள்ளியை நவீன மயமாக்கியுள்ளோம். கல்வி எல்லாவற்றையும் மாற்றியமைக்கும். மாற்றத்துக்கான திறவுகோலாய் அமையும் என நம்புகிறேன்'' என்று பெஞ்சமின் தெரிவித்தார்.
பள்ளியில் இரண்டு தளங்களில் எட்டு வகுப்பறைகள் கொண்ட நவீனமான கட்டிடங்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும் மரத்தால் செய்யப்பட்ட மேசை மற்றும் இருக்கைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, 3 நவீனக் கழிப்பறைகள், கிராமத்து ஏரி, குட்டைகளைத் தூர்வாரி மண் எடுத்து அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், புதிய மின் இணைப்புகள், ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்நிலைத் தொட்டி பதிக்கப்பட்டு குடிநீர் வசதிகள், இரண்டு அலுவலக அறைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கக்கனூர் புனித சிறுமலர் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் ஆனந்த ராஜ் கூறும்போது, ''மேல்நிலைப் பள்ளிக்கான எங்களின் கனவுக் கட்டிடம் இது. பள்ளிக்கு வரும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் வகுப்பறையில் தமிழ், கணித, அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் உயர்தர ஓவியங்கள் வரையப்பட்டு, கட்டிடங்களுக்கு வண்ணம் பூசப்பட்டுள்ளன.
வகுப்பறைகள் அனைத்துக்கும் பாதுகாப்பான மேட்- டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், சாதனைப் பெண்களின் படங்களை வகுப்புகளில் வரைந்துள்ளோம். தோட்ட வசதி, விழா மேடை, சிசிடிவி கேமரா பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளும் எங்கள் கிராமத்துப் பள்ளியில் உண்டு. இவை அனைத்தையும் சாத்தியப்படுத்திய சமூக ஆர்வலர் பெஞ்சமினுக்குப் பள்ளி சார்பாகவும் கிராமத்தினர் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஆனந்த ராஜ் நெகிழ்ந்தார்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT