Published : 01 Feb 2021 12:22 PM
Last Updated : 01 Feb 2021 12:22 PM
திருப்பூர் மாவட்டம் அலகுமலை முருகன் கோயில் அடிவாரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 749 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 4-ம் ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், எம்எல்ஏ-க்கள் ஏ.நடராஜன், உ.தனியரசு, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 749 காளைகள் கொண்டுவரப்பட்டன. இதேபோல, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். வாடிவாசலுக்கு பூஜை செய்யப்பட்டு, முதலாவதாக அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனின் காளை அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டன. புதுக்கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட கட்டப்பா, மதுரை கார்த்தி என்பவரது காளை ஆகியவற்றை யாராலும் அடக்க முடியவில்லை. இதேபோல, மதுரை, புதுக்கோட்டை, கம்பம், தம்மம்பட்டி மாடுகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் விளையாடின.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் காளைகளும் வெற்றி பெற்றன. மதுரை அலங்காநல்லூர் பிரேம் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையைச் சேர்ந்த ஆர்.வி.ரங்கா ஆகியோரது காளைகளுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பார்வையாளர் மாடங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து, ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பாத்திரங்கள், அரிசி மூட்டைகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அதிக காளைகளை அடக்கிய வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டி முடிவில் 12 காளைகளை அடக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசு பெற்றார். வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சவுடு, சிவகங்கையைச் சேர்ந்த ஆதிஷ்வரன், மதுரையைச் சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோர் 2, 3, 4-ம் பரிசுகளைப் பெற்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த விவேக்கின் ஷில்பா என்ற காளை, சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT