Published : 01 Feb 2021 03:12 AM
Last Updated : 01 Feb 2021 03:12 AM

திருமண நாளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உற்சாகம்.. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வாழ்த்து: ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என பொருளாளர் பிரேமலதா தகவல்

திருமண நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள இல்லத்தில் மாலை மாற்றிக்கொண்ட விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கு சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 31-வது திருமண நாளைநேற்று உற்சாகத்துடன் கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியின் 31-ம் ஆண்டுதிருமண நாள் விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரதுஇல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு துணை செயலாளர் எல்.கே சுதீஷ், விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைப்படத் துறையினர் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் - பிரேமலதாவுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மலர் கொத்து அளித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர், தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், கூட்டணி முடிவை தாமதிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது.

234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது. எனினும் கூட்டணி குறித்த இறுதி முடிவை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும். இதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அதேநேரம் நான் சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று யாரும் பார்க்கக் கூடாது. சசிகலாவின் வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

வரும் தேர்தலில் மூன்றாவது அணி அமைவது குறித்து இப்போது கருத்து கூறமுடியாது. வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமகவின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் அனைத்து சாதியினரும் கோரிக்கை வைத்தால் என்ன ஆகும். தேர்தல் நேரத்தில் திமுக அளிக்கும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் இனி ஏமாறமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயகாந்த் பேசாததால் தொண்டர்கள் ஏமாற்றம்

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு வருவதால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று காலை முதல் காத்திருந்தனர். காலை 11 மணிக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்தார். அவருக்கு கட்சியினர் திருமண நாள் வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பிறகு, நிர்வாகிகள், தொண்டர்கள் வரிசையில் சென்று விஜயகாந்த் - பிரேமலதாவுக்கு மலர்க்கொத்து, பழங்கள் கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்தினர். ஆனாலும், நிர்வாகிகள், தொண்டர்களிடம் விஜயகாந்த் எதுவும் பேசாமல் இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ‘‘எதுவும் பேசாமல் இருப்பதை பார்க்கும்போது ஏமாற்றம், கவலையாக இருக்கிறது. அவர் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பழைய மாதிரி கம்பீரமாக பேசுவார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x