Published : 31 Jan 2021 08:51 PM
Last Updated : 31 Jan 2021 08:51 PM
தமிழகத்தில் வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கப்படும். மதுரை வலையங்குளம், ஆணையூரில் மாமன்னர் பெரும்பிடு முத்தரையர் சிலை திறக்கப்படும் என மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற முத்தரையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
முத்தரையர்கள் பெருமைக்குரியவர்கள். கலை, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள். மண்ணையும், மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்குகின்றனர். நானும் ஒரு விவசாயி என்பதால், முத்தரையர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
அதிமுக அரசு விவசாயிகளை பாதுகாத்து வருகிறது. விவசாயிகள் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டது போல், தற்போது குடிமராமத்து பணி மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் பருவமழையில் ஒரு சொட்டு நீர் கூட விணாகாமல் நீர் நிலைகளில் தேக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது. காவிரி விவசாயிகள் நலனுக்காக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் ஏற்கனவே காவிரி வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதி மாசுபடுவதை தடுக்க காவிரி தொழில்நுட்ப திட்டம் நிறைவேற்றப்படும். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். கல்லணை கால்வாய் மேம்பாட்டு பணி விரைவில் தொடங்கப்படும்.
இந்தாண்டு காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய்கள் குறித்த நேரத்தில் தூர்வாரப்பட்டால் 30 ஆண்டுக்கு பிறகு கூடுதல் உணவு தானிய உற்பத்தி நடைபெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 7 முறை உணவு தானிய உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
வேளாண்மைக்கு மட்டும் இல்லாமல் வேளாண் தொழிலுடன் சேர்ந்த கால்நடைகளை பாதுகாக்கவும், கால்நடைகள் மேம்பாட்டிற்காகவும், வேளாண் தொழிலாளர்களுக்கு பசுமை வீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடித்தளமாக விளங்கியது அதிமுக அரசு. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு உள்ஒதுக்கீடு மூலம் நனவாக்கப்பட்டுள்ளது. வேளாண் பணி என்பது சாதாரண பணியல்ல. கடுமையாக உழைக்கும் பணி. உழைக்க பிறந்த முத்தரையர் சமுதாயத்தின் வரலாறு போற்றப்படும்.
இந்த அரசு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக உள்ளது. மக்கள் நினைப்பதை நிறைவேற்றும் ஒரே அரசு இது. அடித்தட்டு மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது.
மதுரையில் வலையங்குளம், ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைகள் அமைக்கப்படும். முத்தரையர் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கப்படும். முத்தரையர் சமுதாய மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு அரசு துணை நிற்கும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT