Last Updated : 31 Jan, 2021 07:33 PM

2  

Published : 31 Jan 2021 07:33 PM
Last Updated : 31 Jan 2021 07:33 PM

அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 12 மணி நேரம் சோதனை: ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல்

உதவி இயக்குநர் கோபி (கோப்புப்படம்)

அரக்கோணம்

அரக்கோணத்தில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அரசு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரத்தின்சந்த் நகரைச் சேர்ந்தவர் கோபி (46). இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் தணிக்கை பிரிவில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பல்வேறு பணிகளுக்காக உதவி இயக்குநர் கோபி லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினருக்கு புகார் வந்தது.

அதன்பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி மற்றும் காவல் துறையினர் நேற்று (30-ம் தேதி)காலை 6 மணிக்கு ரத்தின்சந்த் நகரில் உள்ள கோபி வீட்டுக்கு சென்றனர். அங்கு கோபியின் வீட்டு கதவை போலீஸார் தட்டியபோது நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் திடீரென காம்பவுண்ட் சுவர் மீது ஏறி வீட்டின் உள்ளே குதித்தனர்.

இதையடுத்து, அதிரடியாக உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் கோபியின் வீட்டில் சோதனை நடத்தினர். காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6.30 மணி வரை நீடித்தது. இதில், கோபியின் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 6 வங்கி கணக்கு புத்தகங்கள், ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதைதொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக உதவி இயக்குநர் கோபி மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்காக திங்கள்கிழமை (நாளை) லஞ்ச ஒழிப்புப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் கூறும்போது, ‘‘ புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட, ஊரக வளர்ச்சி முகமை திட்டப்பிரிவின் உதவி இயக்குநர் வீட்டில் 12 மணி நேரம் சோதனை நடத்தினோம். அதில், ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அவர் வாங்கியது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் கைப்பற்றியுள்ளோம். அதேபோல, 6 தனியார் வங்கிகளில் அவர் கணக்கு வைத்துள்ளார்.

கோபியின் வீடுகோபி வீட்டின் வெளிப்புற தோற்றம்.

அதற்காக வங்கி புத்தகத்தை கைப்பற்றியுள்ளோம். திங்கள்கிழமை (நாளை) வங்கியில் ஆய்வு நடத்த உள்ளோம். அதேபோல, வங்கியில் லாக்கர் வசதியை அவர் பெற்றுள்ளாரா ? என்பதையும் விசாரணை நடத்தி, அப்படி இருந்தால் அந்த லாக்கரை திறக்கவும் முடிவு செய்துள்ளோம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் போது அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அவரது காஞ்சிபுரம் அலுவலகத்திலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்’’. என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x