Published : 31 Jan 2021 06:02 PM
Last Updated : 31 Jan 2021 06:02 PM
கூட்டணிக்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் அதிமுகவுடன் பாஜ தேசியத்தலைவர் நட்டா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.
புதுவைக்கு அரசியல் பயணமாக இன்று வந்த நட்டாவுடன், பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நட்சத்திர ஹோட்டல் மதிய உணவு அருந்தினர். இதில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி தலைமையில் ஜெயபால் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன், மருத்துவர் நாராயணசாமி, டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., அதிமுக தரப்பில் புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், மேற்கு மாநில செயலர் ஓம்சக்திசேகர், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதிய உணவுக்குப்பின் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் புதுவை பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நட்டா ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து வெளியே வந்த ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோது, " மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம்" என்று குறிப்பிட்டார்.
கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என கேட்டதற்கு, " அது குறித்து பின்னர் பேசி முடிவுசெய்யப்படும்" என்று புறப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏவிடம் கேட்டதற்கு, "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான்" என்று புறப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என பேச்சு எழுந்துவரும் நிலையில் அதை முன்னாள் முதல்வரான ரங்கசாமி ஏற்பாரா என்ற சிக்கல் நிலவுகிறது.
------
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT