Published : 31 Jan 2021 12:06 PM
Last Updated : 31 Jan 2021 12:06 PM

கல்லல் அருகே வெள்ளத்திலும் தாக்குபிடித்த மாப்பிள்ளை சம்பா: இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

கல்லல் அருகே கீழப்பூங்குடியில் பயிரிடப்பட்ட மாப்பிள்ளை சம்பா.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா மழை வெள்ளத் திலும் தாக்குப் பிடித்ததால், அதைப் பயிரிட்ட விவசாயியை ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இந்தியாவில் வெள்ளைக்கார், கம்பஞ்சம்பா, சிவப்பு குருவிக்கார், செம்பாளை, கவுனி, மாப்பிள்ளைச் சம்பா போன்ற ஆயிரத்துக்கும் மேற் பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன. இயற்கை உரங்களால் விளைந்த இந்த ரகங்கள், ரசாயன உரங்களுக்கு ஈடு கொடுக்கவில்லை. மேலும் நீண்டகாலப் பயிர் என்பதால் காலப்போக்கில் குறுகிய கால நெல் ரகங்களுக்கு விவசாயிகள் மாறினர்.

தற்போது மீண்டும் பாரம்பரிய நெல் வகைகளுக்கு மாறி வருகின் றனர். ‘மாப்பிள்ளை சம்பா' நெல் ரகம் தனித்துவம் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். இந்த நெல் ரகத்தை கல்லல் அருகே கீழப்பூங்குடி விவசாயி மார்க் கண்டேயன் (60) இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளார். தற்போது ஆறு அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால், கல்லல் வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. ஆனால் மாப்பிள்ளை சம்பா வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து விவசாயி மார்க்கண்டேயனை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

விவசாயி மார்க்கண்டேயன்

இதுகுறித்து மார்க்கண்டேயன் கூறியதாவது:

வங்கியில் பணிபுரிந்த நான் விருப்ப ஓய்வு பெற்று 2000-ல் இருந்து விவசாயம் செய்கிறேன். பாரம்பரிய ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாப்பிள்ளை சம்பா பயிரிட்டேன். எனக்கு வேப்பங்குளம் முன்னோடி விவசாயி திருச்செல்வம், குன்றக்குடி வேளாண் மையத் தலைவர் செந்தூர்குமரன் ஆகியோர் உதவி வருகின்றனர்.

மாப்பிள்ளை சம்பாவில் வலுவைத் தரக்கூடிய சத்துகள் உள்ளன. அரிசி சிவப்பாகத்தான் இருக்கும். ஒற்றை நாற்றாக நடவு செய்தால் போதும். வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதத்துக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் பயிர்கள் காயாது. கனமழையால் நீரில் மூழ்கினாலும் நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்கும். வெளிச்சந்தையிலும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு வரவேற்பு உள்ளது என்றார்.கல்லல் அருகே கீழப்பூங்குடியில் பயிரிடப்பட்ட மாப்பிள்ளை சம்பா.
(உள்படம்) விவசாயி மார்க்கண்டேயன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x