Published : 31 Jan 2021 10:44 AM
Last Updated : 31 Jan 2021 10:44 AM
திண்டுக்கல் பிரியாணியின் புகழுக்கு காரணமான காலாபாத் நெல் ரகம் நீண்ட இடைவெளிக்கு பின் சித்தையன்கோட்டை பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகத்தை காக்கும் வகையில் இந்த நெல் ரகத்தை சாகுபடி செய்துள்ளதாக விவசாயி ரசூல்மைதீன் தெரிவித்தார்.
திண்டுக்கல் என்றாலே பூட்டு மட்டுமே நினைவுக்கு வந்த நிலையில், தற்போது பிரியாணிதான் பலருக்கும் நினைவுக்கு வருகிறது. திண்டுக்கல்லில் தயாராகும் பிரியாணிக்கு தேவையானவை திண்டுக்கல் மாவட்ட பகுதிகளிலேயே உற்பத்தி செய்யப்படுவதுதான் திண்டுக்கல் பிரியாணிக்கு தனி ருசி கிடைக்க காரணம். ஆட்டு இறைச்சிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை தேர்ந்தெடுக்கின்றனர். இவை மூலிகை செடிகள் உள்ளிட்ட இயற்கையாக விளையும் செடிகளை சாப்பிடுவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் மலையடிவாரத்தில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு கிராக்கி உள்ளது.
அடுத்ததாக பிரியாணிக்கு முக்கிய தேவையான அரிசி. திண்டுக்கல்லில் பிரியாணி புகழ்பெற தொடங்கியபோது காலாபாத் எனும் பாரம்பரிய அரிசி பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தில் பிரியாணிக்கு என விளைவிக்கப்படும் ‘காலாபாத்’ அரிசி பயிரிடுவது சித்தையன்கோட்டை பகுதியில் அதிகரித்து காணப்பட்டது. பின்னர் தேவைகள் அதிகரிப்பால் மற்ற ரக அரிசிகளையும் பிரியாணிக்கு பயன் படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் காலப்போக்கில் காலாபாத் அரிசி பயிரிடுவது வெகுவாக குறைந்து, பின்னர் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பாரம்பரிய காலாபாத் அரிசியை மீண்டும் சித்தையன்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது. காலாபாத் நெல் ரகத்தை பயிரிட் டுள்ள விவசாயி ரசூல்மைதீன் கூறியதாவது:
காலாபாத் அரிசி என்பது பிரியாணிக்காகவே விளைவிக்கப்படும் அரிசியாகும். திண்டுக்கல்லில் பிரியாணி புகழ்பெறத் தொடங்கியதற்கு காரணமே இப்பகுதியில் அப்போது அதிகளவில் பயிரிடப்பட்ட காலாபாத் அரிசியில் பிரியாணி தயாரித்ததால்தான். அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வயல்வெளியில் நடந்து சென்றாலே மணம் வீசும். பிரியாணியின் மணத்திற்கு இந்த அரிசியின் மணமும் ஒரு காரணம். வீரிய ரக நெல் வரவுக்குப் பிறகு காலாபாத் அரிசி பயிரிடுவதை இந்த பகுதி விவசாயிகள் விட்டுவிட்டனர். காலப்போக்கில் காலாபாத் நெல் ரகம் காணமாலேயே போய்விட்டது. யாரிடமும் விதை நெல் கூட இல்லை.
சித்தையன்கோட்டை பகுதியில் உள்ள வயது முதிர்ந்த விவசாயிகள் அவர்கள் காலத்தில் காலாபாத் நெல் ரகத்தை பயிரிட்டது குறித்து பெருமையாக பேசுவர். இதனால் நாமும் அந்த நெல் ரகத்தை சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. விதை நெல்லைத் தேடி பல இடங்களில் அலைந்துதிரிந்து ஒரு வழியாக அசாம் மாநிலத்தில் இருந்து காலாபாத் ரக நெல் விதைகளை வாங்கினேன். முதலில் 60 சென்ட் நிலத்தில் பயிரிட்டேன் நெல் செடியே புற்கள் மாதிரி மென்மையானதாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் காலாபாத் நெல் ரகத்தை சாகுபடி செய்தேன். கடந்த வாரம் அறுவடை செய்தேன். அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வயல்வெளி மணம் வீசத் தொடங்கிவிட்டது.
தற்போது அறுவடை செய்த காலாபாத் நெல்லை முழுமையாக விற்காமல் ஒரு பகுதியை விதைக்கு என எடுத்து வைத்துக்கொண்டேன். இனி விதையை தேடி அலையத் தேவையில்லை. நாமே உருவாக்கி பலருக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த ரகத்தை மறுபடியும் விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் ரகத்தை இதன் மூலம் காக்க முடியும், என்றார்.சித்தையன்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள காலாபாத் நெல் ரகம். ரசூல்மைதீன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT