Published : 31 Jan 2021 03:13 AM
Last Updated : 31 Jan 2021 03:13 AM
ஒரு சாமானியக் குடிமகனின் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்கிற பக்குவம் அதிகார வர்க்கத்தில் உள்ள எல்லோருக்கும் இருப்பது இல்லை. இந்தப் பிரச்சினை காலம் காலமாக உலகம் எங்கும் இருக்கிறது.
சுந்திரமான நீதித்துறையை கொண்ட இந்தியாவில் எந்த மனுவும், தகுந்த முகாந்திரம் இன்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. எனவே நீதிமன்றம் கேட்கும்போது, தனதுநிலைப்பாடு தவறு எனத் தெரிந்தால், மாற்றிக் கொள்வதாக, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் அறிவித்த சம்பவங்கள் நிறைய உண்டு. அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெறுகிற நிர்வாக சுதந்திரம் கொண்டவர்களாக அதிகாரிகள் இருந்தனர். இவை எல்லாம் பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய் விட்டன.
இன்று, அரசியல் தலைவர்களை விடவும் அதிகாரிகள் மாறி விட்டனர். நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தாலும், தவறை ஒப்புக்கொண்டு, சரி செய்கிற மனநிலை அவர்களுக்கு இல்லை.
‘நீட்’ தேர்வு தொடங்கி பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் வரை,பல தேர்வுகள் நீதிமன்றப் பார்வைக்கு வருவதைக் காண முடிகிறது. இதுவிஷயத்தில் வாரியம் அல்லது தேர்வாணையம் எடுக்கும் நிலைப்பாடுகள், தரும் பதில்கள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
பாதிப்புக்கு ஆளானவர்கள் நீதிமன்றக் கதவைத் தட்டுவதற்கு முன், தங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அல்லது அமைப்பிடம் வைக்கின்றனர். இங்கெல்லாம், யாரும் சற்றும் அசைந்து கொடுப்பது இல்லை; ‘நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; நீங்கள் என்ன கதறினாலும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம்’ என்கிற இறுக்கமான அணுகுமுறை, எழுதப்படாத சட்டம் ஆகி விட்டது.
கடந்த அக்டோபர் 4-ம் தேதி, ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. கரோனா தொற்றின் பாதிப்பு மோசமாக இருந்த நேரம் அது. சிலரால் தேர்வு எழுத முடியவில்லை; சிலரால் முழுமையாக தேர்வுக்குத் தயாராக முடியவில்லை. எனவே, அந்த ஆண்டுடன், தேர்வுக்கு விண்ணப்பிக்கிற வயது நிறைவடைந்த தேர்வர்கள் சிலர், தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று பரவலாக நம்பப்பட்டது. மாறாக, தேர்வர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ்நிலைச் செயலர், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது அதிர்ச்சியாக இருந்தது.
ஓர் அசாதாரண கோரிக்கை எழும்போது, ஆணையத்தின் உயர் நிலையில் முடிவெடுத்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பதுதான் நியாயம். ஆனால் கீழ்நிலைச் செயலர் ஒருவர், எப்போதும் உள்ள விதிமுறைப்படி, கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் தந்துள்ளார். இது குறித்து, நீதிபதி கன்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கீழ்நிலை அலுவலர்களின் அதிகாரம் மிகக் குறுகியது. அவர்களைக் கொண்டு, உச்ச நீதிமன்ற வழக்கில் கொள்கை முடிவுகளைத் தெரிவிப்பது அலட்சியத்தின் உச்சம்.
மனிதாபிமான அடிப்படையில், கூடுதலாக சிலரை தேர்வுக்கு அனுமதிப்பதை, கீழ்நிலை அதிகாரியை விட்டு மறுப்பதன் மூலம் ஆணையம் சொல்ல வருவது என்ன..?
‘எமது அதிகாரமே இறுதியானது; நாங்களாக மனது வைத்தால் மட்டுமே அனுமதிக்க முடியும்; நீதிமன்ற வழக்கின் மூலம் எங்களைப் பணிய வைக்க முடியாது’ என்பதுதான் அது.
இங்கே, தமிழ்நாட்டில் நடந்தது இது:
2016 குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மீது, தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்று புகார் கூறியது. பொய்யான சான்றுகளின் அடிப்படையில் ஆணையத்துக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பியதாக, செய்தி நிறுவனம் மீது உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடுத்தது.
இத்தகைய செய்திகள் ஆணையத்தில் உள்ள தவறுக்கான சாத்தியங்களைக் களைய உதவும் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளை நாம் பலமுறை பாராட்டியுள்ளோம். அதே சமயம் தவறுகளைக் களைய, பிழைகளைத் திருத்திக் கொள்ள எந்த முனைப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
உலகம் போற்றும் திருக்குறள், போலி ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது என்று வினா - விடை அளிக்கிற ஆணையம் அதற்காக வருந்தவில்லை. குரூப்1 தேர்வு வினாத்தாளில், தமிழ் மொழியில் எண்ணற்ற பிழைகள் இருந்ததைப் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், குரூப் 2 தேர்வில், சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கிறது.
பாடத் திட்டம் வெளியிட்டு, அதில் இந்தந்தப் பகுதிகள் (மட்டும்) முக்கியம் என்று எந்தத் தேர்வாணையமும் குறிப்பிட்டுச் சொன்னதாகத் தெரியவில்லை. ஏன் இந்த மரபு மீறல்?
ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தமக்குப் பிடித்த கொள்கைகளை தேர்வர்களின் மீது திணிப்பதாகத் தோன்றுகிறது.
அரசுகளுக்குக் கட்டுப்படாது ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படத் தரப்பட்டுள்ள அதிகாரம், தனித்து இயங்கத்தானே அன்றி தன்னிச்சையாக செயல்பட அல்ல. இதனை, தேர்வர்களின் மனுக்கள் மீது நீதிமன்றங்கள் சொல்வதற்கு முன்பாக, ஆணையங்கள் தாமாகவே புரிந்து நடந்து கொண்டால் நல்லது. இதுதான், திருக்குறள் நவிலும் ‘நயத்தக்க நாகரிகம்’.
தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆணையங்கள் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், நீதிமன்றங்கள் மூலம்தான் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற நிலைக்குத் தேர்வர்களைத் தள்ளுதல், ஆணையங்களுக்கு அழகல்ல. நிறைவாக, தேர்வு ஆணையங்களை விடவும் தேர்வர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்ல செய்திதானே..?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT