Published : 30 Jan 2021 07:36 PM
Last Updated : 30 Jan 2021 07:36 PM

பயணி தவறவிட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை; நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: காவல் ஆணையர் கேடயம் வழங்கி பாராட்டு

சென்னை

சென்னை குரோம்பேட்டை பகுதியில் ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை குடும்பத்தினருடன் நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

சென்னை, குரோம்பேட்டை, லட்சுமிபுரம், 4வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் பால் பிரைட்(57). இவரது என்பவரின் மகளுக்கு ஜன.27 அன்று குரோம்பேட்டை, ஜிஎஸ்டி அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் ஜிஎஸ்டி அன்னை சர்ச்சில் இருந்து தனது குரோம்பேட்டை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

வீட்டில் வந்து இறங்கிய போது, ஆட்டோவில் தனது மகளின் 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை மறதியாக தவற விட்டுவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்குள் சென்றப்பின்னர் பொருட்களை சோதித்தபோது நகைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டது தெரியவந்தது. இது குறித்து பால் பிரைட் உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், தீவிர விசாரணை நடத்தினர், பால் பிரைட் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோவின் பதிவு எண்ணை (TN-11-AM-1132) கண்டறிந்து அதன் மூலம் ஆட்டோவின் உரிமையாளரின் முகவரிக்கு சென்று விசாரணை செய்ததில் ஆட்டோ, ஓட்டுநர் சரவணகுமாரின் தங்கை பெயரில் இருப்பது தெரியவந்தது. சரவணகுமாரின் தங்கையிடம் விசாரணை செய்ததில் சரவணகுமார் சவாரிக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பால் பிரைட் வீட்டைத்தேடி வந்த ஆட்டோ ஓட்டுநர் சரவண குமாரிடம் தான் தவற விட்ட 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பை குறித்து கேட்க ஆட்டோ ஓட்டுநர் சரவணக்குமார் ஆட்டோவில் நீங்கள் தவற விட்ட நகைப்பையை கொடுக்கவே உங்களைத்தேடி வந்தேன் என தெரிவித்துள்ளார்.

போலீஸில் புகார் அளித்ததால் பால்ப்ரைட்டுடன் ஆட்டோ ஓட்டுர் சரவணக்குமார் குரோம்பேட்டை காவல் நிலையம் சென்று ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை ஆய்வாளர் முன்னிலையில் உரிமையாளர் பால்பிரைட் இடம் ஒப்படைத்தார்.

பயணி ஆட்டோவில் தவறவிட்ட 50 சவரன் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சரவணக்குமாரை குடும்பத்தினருடன் அலுவலகத்துக்கு அழைத்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவரை பாராட்டி கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x