Published : 30 Jan 2021 06:27 PM
Last Updated : 30 Jan 2021 06:27 PM

பொதுமக்கள் அதிமுகவுக்கு அரணாக இருக்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

மதுரை

பொதுமக்கள் அதிமுகவுக்கு அரணாக இருக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சியின் 88 மற்றும் 89-வது வார்டு சோலையழகுபுரம் பகுதிகளில் ரூ.63.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஃபேவர் பிளாக் சாலை மற்றும் குடிநீர் மெயின் குழாய் அமைப்பதற்கான பணி தொடக்க விழா இன்று நடந்தது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புதிய பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''மாநகராட்சியில் 88-வது வார்டைப் பொறுத்தமட்டில் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி ஆகிய நிதியிலிருந்து சாலை வசதி, கட்டிட வசதி, குடிநீர் வசதி என ரூ.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பகுதியில் 2016-ம் ஆண்டு முதல் குடிநீர், பாதாளச் சாக்கடை, ஆழ்துளைக் கிணறு, ஃபேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால், கட்டிடப் பணிகள் என 30 பணிகள் ரூ.4 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல், அனைத்து வார்டுகளிலும் ஏராளமான நலத்திட்டப் பணிகள் நடக்கின்றன. மதுரையைப் பொறுத்தமட்டில் மற்ற நகரங்களைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயர்கேம்ப்பில் இருந்து இரும்புக் குழாய்கள் மூலமாக 95 கிலோ மீட்டர் தூரமுள்ள வைகை அணை அருகில் இருந்து மதுரைக்குத் தண்ணீர் வருகிறது. இந்த திட்டப்பணிகள் விரைவாக நடக்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வைகைக் கரையில் இருபுறமும் விரைவுச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதனால், பொதுமக்கள் அதிமுகவுக்கு என்றும் அரணாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x