Last Updated : 30 Jan, 2021 05:56 PM

 

Published : 30 Jan 2021 05:56 PM
Last Updated : 30 Jan 2021 05:56 PM

புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் வெளியேற்றம்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளுடன் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இதன் 2-வது மாடியில் உள்ள தாய்ப்பால் சேகரிப்பு மையத்தில் இன்று (ஜன.30) திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து கரும்புகை வெளியேறியதால் பணியிலிருந்த செவிலியர்கள் பதற்றமடைந்தனர்.

உடனே கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மையத்தின் அருகில் வார்டுகளில் இருந்த கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள், பச்சிளங் குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, கீழ்த்தளத்தில் தரையில் அமர வைக்கப்பட்டனர். இதில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களும் வெளியேறினர். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், தீயணைப்புக் கருவிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.

ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்து நடந்த இடத்தை, மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி டாக்டர் முரளி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்தத் தீ விபத்தினால் யாருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், உறவினர்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இத்தகவல் அறிந்து கர்ப்பிணிகள், தாய்மார்களின் உறவினர்கள் அங்கு கூடியதால் சிறிது பரபரப்பு நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x