Published : 30 Jan 2021 04:24 PM
Last Updated : 30 Jan 2021 04:24 PM
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக காவலருக்குக் கட்டாய ஓய்வு வழங்கி அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
வேலூர் ஆயுதப்படைக் காவலர் சிவக்குமார் என்பவர், 17 வயது பள்ளி மாணவியைத் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை வெளியில் அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், பின்னர் வேறு பெண்ணைத் திருமணம் செய்ததாகவும் 2005-ம் ஆண்டு இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதை விசாரித்த வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி, பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்றும், ஏமாற்றியது மட்டும் நிரூபணமாவதாகவும் அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையை ஏற்க மறுத்த வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, அவருக்குக் கட்டாய ஓய்வு அளித்து 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி உறுதி செய்ததை எதிர்த்து, சிவக்குமார் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, கட்டாயப் பணி ஓய்வு அளித்து எஸ்.பி. பிறப்பித்த உத்தரவை இன்று ரத்து செய்தது.
மேலும், இந்த வழக்கை மீண்டும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து குறைந்த தண்டனை விதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட நாளிலிருந்து 50 சதவீத ஊதியத்தைப் பெற மனுதாரருக்கு உரிமையுள்ளதாகவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT