Published : 30 Jan 2021 02:23 PM
Last Updated : 30 Jan 2021 02:23 PM
யூடியூப் சேனலில் பிரபலமாக விளங்கும் புதுக்கோட்டை விவசாயிகளுடன் சேர்ந்து சமையல் செய்து ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தார் ராகுல் காந்தி. காளாண் பிரியாணி நல்லா இருக்கு என்று தமிழில் கூறி, ருசித்துச் சாப்பிட்ட அவர் அப்போது அடுத்தமுறை எனக்காக ஈசல் சமைத்துத் தருகிறீர்களா என்று கேட்டு மலைக்க வைத்தார்.
புதுக்கோட்டை, வீராமங்கலம் விவசாயிகள் சிலர் நடத்தும் விசிசி (village cooking team) எனும் கிராம சமையல் சேனல் யூடியூபில் பிரபலம். 71 லட்சம் பேர் இந்த சேனலின் சந்தாதாரர்களாக உள்ளனர். பிரபல சமையல்காரர் பெரியதம்பி எனும் முதியவரின் கீழ் சுப்ரமணியன், முருகேசன், அய்யங்கார், தமிழ்செல்வன், முத்துமாணிக்கம் போன்றோர் நடத்தும் தமிழக சமையல் மிகப் பிரபலம்.
இவர்கள் தோப்புக்குள் பெரிய சட்டிகள் வைத்து பிரியாணியில் பல வகைகளை பிரம்மாண்டமாக செய்வது வழக்கம். பிரியாணியில் என்னென்ன வகைகள் உண்டோ அத்தனையும் செய்து காட்டியுள்ளனர். சமையல் செய்யும் முன் பொருட்களை, இறைச்சியை வாங்கி வந்து அதை எப்படிச் செய்கிறோம் என செய்து காட்டுகிறார்கள். அனைத்தும் பாரம்பரிய தமிழ் முறையில் கையால் அரைத்துச் செய்கிறார்கள்.
இதில் மூத்த சமையல்காரர் பெரியதம்பி சமையல் செய்யும் முன் எந்தப் பொருளைப் போடுகிறாரோ அதன் பெயரை உரக்கச் சொல்லிப் போடுவது வழக்கம். இவர்கள் சமையல் கலை மூலம் பிரபலமானது ராகுல் காந்தியையும் சென்றடைந்தது. 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தமிழகம் வந்த ராகுல், அவர்களைச் சந்திக்க விரும்பினார்.
இதற்காக கரூர் எம்.பி. ஜோதிமணி ஏற்பாடுகளைச் செய்ய, தோப்புக்குள் காளான் பிரியாணி செய்வதில் ராகுல் கலந்துகொண்டார். ராகுலை வரவேற்ற அவர்கள் தொடர்ந்து சமையல் செய்தனர். அதை வெகுவாக ராகுல் ரசித்தார். காளான் பிரியாணி தயாரானவுடன் வெங்காயம், தயிர் உள்ளிட்டவற்றைத் தயார் செய்த அவர்கள், ராகுலைத் தயிர் பச்சடி செய்யச் சொன்னார்கள்.
மூத்த சமையல்காரர் பெரியதம்பி பாணியில் ராகுலும் சத்தமாக வெங்காயம், தயிர் ( தயிர் என்பது வாயில் நுழையாததால் பலமுறை கேட்டுக்கொண்டார். பின்னர் சத்தமாக தயிர்) எனச் சொல்லி பாத்திரத்தில் கொட்டினார். உப்பை ராகுல் காந்தியே அளவாகப் போட்டு கல்லுப்பு எனச் சத்தமாகச் சொல்லிப் போட்டு தயிர் பச்சடி செய்தார்.
அதைக் கலக்கும்போது எனக்கும் சமையல் செய்யப் பிடிக்கும், நானும் சமையல் செய்வேன் எனப் பெருமையாகச் சொல்லியபடி கலக்கிய ராகுல், அதை ருசி பார்த்தபின், எப்படி இருக்கு சொல்லுங்கள் என மற்றவர்களிடம் கொடுத்தார். நீங்கள் சரியான அளவில் உப்பு போட்டுள்ளீர்கள் என்று சமையல் கலைஞர்கள் அவரைப் பாராட்டினர்.
அதன் பின்னர் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் ராகுலிடம், உடன் சாப்பிடுபவர் எப்படி இருக்கு எனக் கேட்க, நல்லா இருக்கு என ராகுல் சொல்கிறார். சாப்பிட்டபின் சமையல் கலைஞர்களுடன் அமர்ந்து ராகுல் பேசுகிறார்.
வந்திருப்பது ராகுலா? எங்களுடன் அமர்ந்து சாப்பிட்டாரா? இப்போதுவரை என்னால் நம்ப முடியவில்லை என ஒருவர் சொல்ல, அதை ஜோதிமணி மொழிபெயர்த்துச் சொன்னார்.
ஜோதிமணி உதவியுடன் அவர்களுடன் உரையாடிய ராகுல், அவ்வப்போது தமிழ் வார்த்தைகளைக் கேட்டு, அதைச் சொல்லிப் பாராட்டினார். சமையல் கலைஞர்கள் இந்தக் கலையை மற்ற தென் மாநிலங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என ராகுல் கேட்டுக்கொண்டார். இந்தக் கலையை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தபோது, சிகாகோவில் உள்ள தனது நண்பர் மூலம் அதற்கு ஏற்பாடு செய்வதாக ராகுல் உறுதி அளித்தார்.
இவ்வளவு சமைக்கிறீர்களே என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது, கரூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழக்கமாகக் கொடுத்துவிடுவோம் என அவர்கள் பதிலளித்தனர். போகும்போது ராகுல் வைத்த கோரிக்கையில், சமையல் கலைஞர்கள் நெகிழ்ந்து போனார்கள். அடுத்த முறை வரும்போது எனக்கு ஈசல் சமைத்துத் தருவீர்களா? என ராகுல் கேட்க, கட்டாயம் சார் என பதிலளித்துள்ளனர். காளான் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு எனச் சொல்லி விடைபெற்றார் ராகுல்.
இந்தக் காணொலிதான் தற்போது ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக உள்ளது. 17 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் பார்த்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT