Published : 30 Jan 2021 11:42 AM
Last Updated : 30 Jan 2021 11:42 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா எடுத்து நேற்று மாலை (29-ம் தேதி) அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக டி.விஜயா (58) என்பவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பணியாற்றினார். மேலும், கிராமத்தில் உள்ள பெண்களிடம், உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில் தொடங்கி, எதிர்காலத்தைக் கட்டமைக்க சிறு சேமிப்பை ஊக்கப்படுத்தி பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்து, தபால் அலுவலகத்தில் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கி அதனை வழிநடத்தினார்.
மேலும், பெண்கள் சொந்தக் காலில் நின்று உழைத்து வருமானத்தைப் பெருக்கும் விதமாக மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி அதில் பெண்களுக்குப் பல்வேறு பயிற்சிகளையும் வழங்க வழிவகை செய்தார்.
சத்துணவுப் பணியில் ஈடுபட்டாலும், கிராம மக்களிடம் அன்பாகப் பழகி, அவர்களில் ஒருவராகி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் நடைபெற்று வரும் சுக, துக்க நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். பணி ஏற்ற நாள் முதல் 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி, பல நேரம் வேறு கிராமத்துக்குப் பணி மாறுதல், பதவி உயர்வு வந்தபோதும், நான் இந்த ஊரிலேயே பணியாற்றுகிறேன் எனக் கூறி பணியாற்றி நேற்று பணி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதற்காகப் பள்ளி வளாகத்தில் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கிராம மக்கள் சார்பில் கோலாட்டம், மங்கள வாத்தியம் முழங்கவும், சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் அன்பளிப்புகள், பொன்னாடைகள் போர்த்தி சத்துணவு அமைப்பாளரைக் கவுரவித்தனர். பின்னர் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.
பணியாற்றிய இடத்தில் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாமல் இருந்ததோடு, கிராம மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்திய சத்துணவு அமைப்பாளரின் பணி ஓய்வு பாராட்டு விழாவை ஒரு கிராமமே இணைந்து ஏற்பாடு செய்து வழி அனுப்பி வைத்த நிகழ்ச்சி, அந்த கிராமத்தில் அனைவருக்கும் ஒரு நெகிழ்வான தருணமாக அமைந்தது.
வாழ்த்துரையில் பேசிய பலரும், "உங்களுக்கு அரசு பணி நிறைவு வழங்கினாலும், கிராம மக்களாகிய நாங்கள் உங்கள் பணி நிறைவை வழங்காமல், எங்களோடு உங்களது காலம் இருக்கும் வரை, எங்களுக்காகத் தொடர்ந்து பல விழிப்புணர்வையும், சிறுசேமிப்பு உள்ளிட்ட அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதுணையாகவும் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
ஏற்புரையை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் விஜயா பேசுகையில், ”நான் இந்த ஊருக்கு வரும்போது போதிய பேருந்து வசதி, வாகன வசதி இல்லாத நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முந்திரிக் காடுகளுக்கு மத்தியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கி வந்து ஒருவித அச்சத்தோடு பணியாற்றினேன். ஆனால், இந்த ஊர் மக்கள் காட்டிய அன்பால், எனக்குப் பல்வேறு கட்டங்களில் பணிமாறுதல், பதவி உயர்வு வந்தும் அதனை ஏற்காமல் இந்த ஊரிலேயே பணியாற்றினேன்.
குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கு முன் நான் அந்த உணவைச் சாப்பிட்ட பின்னர்தான் குழந்தைகளுக்கு வழங்கினேன். அப்போதுதான் தரமான உணவா இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அதைக் கடைசி வரை கடைப்பிடித்தேன். திருமணம் செய்து கொண்டால், பின்னால் இந்த கிராம மக்களை விட்டுப் பிரிய நேரிடும் என்பதால், நான் திருமணமே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
அந்த அளவுக்கு இந்த கிராம மக்களை என்னை ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களில் ஒருவராக பார்த்துக் கொண்டனர். இந்தப் பணி நிறைவு பாராட்டு விழா நான் எதிர்பாராதது. இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறனோ” எனக் கூறி விழாவில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT