Published : 30 Jan 2021 09:40 AM
Last Updated : 30 Jan 2021 09:40 AM
நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிடத் தயார் என்று பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் சவால் விடுத்துள்ளார்.
பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் டெல்லியிலிருந்து நேற்று காலை புறப்பட்டு மாலை புதுச்சேரி வந்தபோது மாநில எல்லையான கனகசெட்டிகுளத்தில் அவரது ஆதரவாளர்கள், பாஜகவினர் தரப்பில் வரவேற்பு தரப்பட்டது. தொடர்ந்து காலாப்பட்டு விநாயகர் கோயில், முருகன் கோயிலில் தரிசனம் செய்தார்.
அங்கிருந்து ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோட்டகுப்பம், முத்தியால்பேட்டை, நேருவீதி வழியாக மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து செஞ்சி சாலை வழியாக புஸ்சி வீதி, நெல்லித்தோப்பு சந்திப்பு, இந்திராகாந்தி சந்திப்பு வழியாக பாஜக தலைமை அலுவலகத்துக்கு முதல் முறையாகச் சென்றார். அங்கு மாநிலத் தலைவர் சாமிநாதன், மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து இரவுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமச்சிவாயம் பேசியதாவது:
''பாஜகவில் இணைந்துள்ளது ஒரு தொடக்கம்தான். எங்களைப்போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பல பேர் பாஜகவில் இணைந்துகொள்ளத் தயாராக உள்ளனர்.
மத்தியிலும் மாநிலத்திலும ஒரே ஆட்சி. இதுவே எங்களின் தாரக மந்திரம். மக்களை ஏமாற்றுவதே முதல்வர் நாராயணசாமியின் தொழிலாக உள்ளது. கிரண்பேடி தடுத்ததாக திசை திருப்புகிறார். மத்திய அரசானது பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்ததா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
சுற்றுலாத்துறைக்கு 250 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி, புதுவைக்கு மாநிலத்துக்கு வந்துள்ளது. 85% காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் எனக் கூறும் முதல்வர், ஏதாவது ஒன்றை விரல்விட்டுக் கூறமுடியுமா? புதுச்சேரியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக போராட்டக் களமாக மாற்றியது தான் நாராயணசாமியின் சாதனை. நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிடத் தயார்''
இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT