Published : 30 Jan 2021 09:12 AM
Last Updated : 30 Jan 2021 09:12 AM

உயர்மின் கோபுரங்கள் விவகாரம்; வாக்குறுதியை நிறைவேற்றாமல் உழவன் மகன் என முதல்வர் பழனிசாமி நடிக்கக் கூடாது: வைகோ 

உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், தேர்தலுக்காக, நான் உழவன் மகன் என எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

''உயர்மின் கோபுர திட்டங்களால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், உயர்மின் கோபுரத்திற்குப் பதிலாக சாலை ஓரமாகக் கேபிள் அமைத்து, மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள், அறவழியில் போராடி வருகின்றார்கள்.

சென்னை போன்ற மாநகரங்கள், மதுரையில் இருந்து-இலங்கை , கொச்சி மற்றும் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டிக்கு, கேபிள் அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மத்திய, மாநில அரசுகள், கிராமங்களில் மட்டும் விளைநிலங்களுக்கு நடுவே உயர்மின் கோபுரங்களை அமைத்து, நிலங்களைக் கையகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றன. நிலத்தைக் கையகப்படுத்தியதற்காக, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் தரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை.

2019ஆம் ஆண்டு, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்குச் சென்று நான் பார்வையிட்டபோது, விவசாயிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அறிந்தேன்.

04.01.2019 அன்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக சட்டப்பேரவையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு ஈடு என அறிவித்தார். ஆனால், அதை இன்றுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

அரசுகள் மேற்கொள்கின்ற அனைத்து வகை திட்டங்களாலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, 100 சதவீத கருணைத் தொகை வழங்கப்படுகின்றது. ஆனால், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மட்டும் வழங்குவது இல்லை. பாதிக்கப்பட்ட கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், வீடுகளுக்கும் இழப்பீடு தரவில்லை.

தற்போது தமிழக அரசு விருதுநகரில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வரை, 765 கிலோவாட் உயர் மின் கோபுரம் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது. திட்டப்பணிகள் 10 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன. மின்சார நிலையங்கள் ஆயத்தம் ஆகவில்லை; துணைமின் நிலையப் பணிகள் தொடங்கப்படவே இல்லை.

உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை அமைப்பதற்காக அதிகாரம் அளித்துள்ள, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட, கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள, இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் மேற்கண்ட திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், விவசாயிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை தமிழக அரசு நடத்தவில்லை.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி, பள்ளிபாளையத்தில் உள்ள பயணியர் விடுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியைச் சந்தித்து திட்டப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக நிறுத்துகிறேன் என்று அறிவித்தார். ஆனால், தொடர்ந்து திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள், அமைச்சர் அளித்த வாக்குறுதியை நினைவூட்டி, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் படியூர், பெல்லம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயம் என்பதைத் தமிழகம் அறியும்.

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை; ஆனால், தேர்தலுக்காக, நான் உழவன் மகன் என எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்.

எனவே, உயர்மின் கோபுரங்கள் பிரச்சினையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x