Published : 29 Jun 2014 12:00 PM
Last Updated : 29 Jun 2014 12:00 PM
காவிரி பிரச்சினையைத் தீர்க்க எந்த பிரதமருக்கும் அக்கறையில்லை என்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.
தமிழ்நாடு வேளாண்மை டிராக்டர் விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.
போராட்டத்தைத் தொடக்கி வைத்து பழ.நெடுமாறன் பேசியது:
காவிரியில் தமிழகத்துக்குரிய உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் 7 முறை தீர்ப்பளித்தும் கர்நாடகம் அதை செயல்படுத்தாமல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுபற்றி முடிவெடுக்கவில்லை.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்த பின்னர் தான் அது வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்து வருகிறது. கர்நாடக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நாடகமாடி வருகிறது. நாட்டில் உள்ள அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை கண்டிக்காதது வேதனையளிக்கிறது.
இருவேறு நாடுகளை இணைக்கும் சிந்து நதிப் பிரச்னையில் அக்கறையுடன் தீர்வு காணும் மத்திய அரசு, இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்திருக்கும் நதி நீர் பிரச்சினையில் தீர்வு காண முற்படவில்லை.
கர்நாடக அரசு மேகதாட்டில் அணை கட்டுமானப் பணியை மேற்கொண்டிருப்பதை தொடக்கத்திலேயே மத்திய அரசு தடுக்க வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த தமிழகமும் இதற்கு எதிராக திரளும் என்றார் நெடுமாறன்.
போராட்டத்தில் சங்க பொதுச் செயலர் சேவையா, மாவட்டச் செயலர்கள் அ.பன்னீர்செல்வம், எஸ்.சம்பந்தம் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
மாலையில் உண்ணாவிரத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி ஆர்.வீரமணி நிறைவு செய்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT