Last Updated : 14 Nov, 2015 05:11 PM

 

Published : 14 Nov 2015 05:11 PM
Last Updated : 14 Nov 2015 05:11 PM

வாய் பேச முடியாதவரின் கைவண்ணத்தில் பேசும் ஓவியங்கள்

பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில், நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் உயிரூட்டமான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளத் தோணும் வகையிலான இந்த ஓவியங்களை வரைந்தவர் ஓவியர் எஸ்.மாலையப்பன் (63). இவர் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதுதான் ஆச்சரியம்.

பாளையங்கோட்டை, செந்தில் நகரில் தனது மனைவி செல்லம்மாள் (62) மற்றும் 4 பிள்ளைகளுடன் வசிக்கும் மாலையப்பனின் பூர்வீகம், தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூர். பிறவியிலேயே வாய்பேசாத முடியாது. இந்த குறையை நிறையாக்கி, உலகம் உற்றுநோக்க வைத்தது இவரது ஓவியப்படைப்புகள்.

பாளையங்கோட்டை காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். பின்னர் கோவில்பட்டியில் சி.கொண்டையராஜு, டி.எஸ்.சுப்பையா, டி.எம்.ராமலிங்கம் ஆகியோரிடம் ஓவியக்கலையைக் கற்றார். 10 ஆண்டுகள் இவர்களிடம் பெற்ற பயிற்சிக்குப் பின், தெய்வச்சித்திரங்கள் வரையும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

சிவகாசி காலண்டர் நிறுவனங்களுக்கு தெய்வ உருவங்களை தத்ரூபமாக வரைந்து அளித்தார். இதுபோல் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போன்ற பல்வேறு படக்கதை புத்தகங்களுக்கும் ஓவியங்களை வரைந்து அளித்தார். புத்தகங்களில் அட்டைப் படங்களுக்கு தெய்வ உருவங்களையும் வரைந்துள்ளார்.

தற்போது இந்து கோயில்களுக்கு தெய்வ உருவங்களை வரைந்து அளிக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் சித்திரங்களை ஒன்றரை ஆண்டு களாக வரைந்து முடித்தி ருந்தார். இந்த ஓவியங்கள் கடந்த 18.9.2005-ம் தேதி பக்தர்கள் தரிசிக்க திறந்து வைக்கப்பட்டன. இதுபோல் பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலிலும் 6 பெரிய சுவாமி படங்களை வரைந்திருக்கிறார்.

ஓவியர் மாலையப்பனிடம் கேள்விகளை எழுதி காண்பிக்க, அவரும் பதில்களை எழுதி அளித்தார். `தெய்வீக சிந்தனையுடன் ஓவியங்களை வரையும்போது மனசுக்குள் தெய்வீக களை தாண்டவமாடும். இதை வெளியில் சொல்லமுடியாது. இரவில் தூங்கும்போது கனவில் சிவபெருமான் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்திருக்கிறேன். என்னிடம் காசு, பணம் பெரிதாக சேரவில்லை. ஆனால் தெய்வ அருள் இருக்கிறது. நிம்மதியுடன் இருக்கிறேன். நான் வியாபாரத்துக்காக விளம்பர பெயர் பலகைகளை எழுதி தருவதில்லை’ என்று அவர் எழுதி தந்த பதில் வியப்பூட்டியது.

இவர் சிவன் கோயிலில் வரைந்துள்ள ஓவியங்களையும், அந்தந்த நாயன்மார்கள் குறித்த விவரங்களையும் தொகுத்து சிவனருளே சித்தாந்த அடியார்கள் என்ற தலைப்பில் வண்ணப்புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். தெய்வச் சித்திரம், சிற்ப ஓவியம், தஞ்சாவூர் ஓவியம் என்றெல்லாம் கைவண்ணம் காட்டும் இந்த மாற்றுத்திறனாளி தனது ஓவியங்கள் மூலம் பேசிக்கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x