Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
திருநெல்வேலி மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள நயினார்குளத்தில் கழிவுகள் கலப்பதை தடுக்காமல் அழகுபடுத்தவும், ரூ.14.68 கோடியில் அழகிய நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது விழலுக்கு இறைத்த நீர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் மழைக் காலங்களில் நீர்பெருகும் முக்கிய குளங்களில் தற்போது எஞ்சியிருப்பவை நயினார்குளமும், வேய்ந்தான்குளமும் ஆகும். நயினார்குளம் தண்ணீர் தற்போதுவரை விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இக்குளத்தின் சுற்றுப்புறம் முழுக்க கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி டவுனில் உள்ள முக்கிய பகுதிகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக இக்குளத்தில் கலக்கிறது.
இதுபோல் சுற்றிலும் உள்ள குடியிருப்புகளில் இருந்தும் கழிவுகள் குளத்துக்கு வந்து சேருகின்றன. டவுனில் உள்ள முக்கிய கடைகளில் இருந்து துணிக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள், பயன்படாத பொருட்கள் இரவோடு இரவாக குளக்கரையில் கொட்டப்படுகின்றன. பல இடங்களில் இருந்து கட்டிட இடிபாடுகளையும் இங்கு கொட்டி வருகின்றனர்.
ஆண்டுதோறும் அமலைச் செடிகள், ஆகாயத் தாமரை படர்ந்து குளத்தின் மேற்பரப்பு மூடப்படுவதும், அவற்றை அகற்று வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கழிவுகள், குப்பைகள் சேரும் இடமாக மாறியிருக்கும் நயினார்குளத்தை அழகுபடுத்தப்போவதாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்பாட்டு பணிகளை செய்வதாகவும் திருநெல்வேலி மாநகராட்சியானது முதலே சொல்லி வருகின்றனர்.
பல கோடிகளை செலவிட்டு கட்டமைப்புகளையும் உருவாக்கி யுள்ளனர். ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது திருநெல்வேலியின் பெரிய கழிவுநீர் தேக்கமாக இக்குளம் காட்சியளிக்கிறது. சுற்றுச்சுவர் தடுப்புகள் உடைபட்டு கிடக்கின்றன. திருநெல்வேலி டவுனில் பல்வேறு இடங்களில் இருந்து வழிந்தோடும் சாக்கடை குளத்தில்தான் சேகரமாகிறது. சாக்கடை வருவதை தடுக்கவோ, குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டும் இடமாக நயினார்குளம் கரையோரத்தை மாற்றியிருப்பதை தடுத்து நிறுத்தவோ மாநகராட்சி நிர்வாகம் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நயினார்குளத்தின் கரையை மேம்படுத்திட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் முதல் கட்டமாக 1.5 கி.மீ. நீளத்துக்கு அழுகுபடுத்துதல், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் ரூ.14.68 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது.
நயினார் குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகள், எதிர்புறம் தடுப்பு சுவர், நடுவில் அழகிய நடைபாதைகள் அமைப்பதுடன், நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளத்தில் கழிவுகள் சேகரமாவதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும், ஆக்கிரமிப்புகளையும் தடுக்க உரிய செயல்திட்டங்கள் இல்லாமல் வெறுமனே அழகுபடுத்துவதாக பலகோடிகளை செலவிடுவதால் பயனில்லை என்பதே அப்பகுதி மக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT