Published : 29 Jan 2021 08:23 PM
Last Updated : 29 Jan 2021 08:23 PM
தமிழக முதல்வர் பழனிசாமி தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், எழுவர் விடுதலை உள்ளிட்ட விஷயங்களுக்காகச் சந்தித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 அன்று கூடுகிறது. ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது. சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடரும் இதுதான். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்படும்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 2 அன்று தொடங்குவதை முன்னிட்டு இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. பின்னர் முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்துக் கோரிக்கை வைத்ததாகவும், அதுகுறித்து ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT