Published : 29 Jan 2021 07:41 PM
Last Updated : 29 Jan 2021 07:41 PM
மத்திய அரசு, ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கச் சட்டம் இயற்ற முயற்சி செய்து வருவது கண்டனத்துக்குரியது. மருந்தாளர்கள் உள்ளிட்ட மருந்து வணிகத்தை 2 கோடி பேருக்கும் மேல் நம்பியிருக்கிறார்கள். ஆன்லைன் மருந்து வழங்கும் முறை சமுதாயச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று முகநூலில் வெளியிட்ட பதிவு:
“ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கச் சட்டம் கொண்டு வர மத்திய பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவது கண்டனத்திற்குரியது. மருந்தாளர்கள் உள்ளிட்ட மருந்து வணிகத்தை 2 கோடி பேருக்கும் மேல் நம்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆன்லைன் மருந்து வழங்கும் முறை சமுதாயச் சீரழிவிற்கும் - இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்காலத்திற்கும் மிகுந்த ஆபத்து விளைவிக்கும் என இந்த வணிகத்தை நம்பியிருக்கும் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
எவ்வித ஆலோசனையும் இன்றி - எதேச்சதிகாரமாக சட்டமியற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்த மத்திய பாஜக அரசு துடிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி - சமுதாயச் சீரழிவிற்கும் வித்திடும் என்பதால் ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் வகையில் சட்டமியற்றும் முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மற்றொரு பக்கம், தமிழகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கரோனா பெருந்தொற்றின்போது முன்களப் பணியாளர்களாகத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய அவர்களது கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். உயிர் காக்கும் துறையினரை மத்திய, மாநில அரசுகள் போராடும் நிலைக்குத் தள்ளுவது முறையன்று”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT