Published : 29 Jan 2021 06:56 PM
Last Updated : 29 Jan 2021 06:56 PM

பாஜக தலைவர் எல்.முருகன் மீது திமுக அவதூறு வழக்கு

சென்னை

பாஜக தலைவர் எல்.முருகன் முரசொலி அறக்கட்டளை குறித்தும், திமுகவை ஆதிதிராவிட மக்களின் விரோதி போலவும் சித்தரித்துப் பேசியிருப்பதைக் கண்டித்தும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுகவின் இன்றைய செய்தி வெளியீடு:

“ஜன.29 தனியார் தின இதழின் வேலூர் பதிப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முரசொலிக்கு எதிராக அவதூறு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அவரது அந்தப் பேட்டியில் முரசொலி நிலம் பற்றித் தொடர் அவதூறைப் பரப்பும் விதமாகவும், திமுக ஆதிதிராவிட மக்களின் விரோதி போலவும் சித்தரித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், திமுகவிற்கு சமூக நீதி பற்றிப் பேச அருகதை இல்லை என்று எவ்வித முகாந்திரமுமின்றி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திமுக சட்டத்துறையின் சார்பில் இன்று 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் - மன்னிப்பு தெரிவிக்க வேண்டியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக திமுக அமைப்புச் செயலாளரும் - முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ். பாரதி, பாஜக தலைவர் எல்.முருகன் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இன்று (29.01.2021) சென்னை எழும்பூர் பெருநகர குற்றிவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி முன்பு ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். இந்த அவதூறு வழக்கினை, அவர் சார்பில் வழக்கறிஞர்கள் மனுராஜ் சண்முகசுந்தரம், தீலிபன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

மனுவில், “பாஜக தலைவர் எல்.முருகன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் அலுவலில் இருந்தபோதே அவர் முரசொலி அறக்கட்டளை தொடர்பான சர்ச்சையை விசாரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் பாஜக செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளும், இதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை அவர் அறிந்திருந்தும், உண்மைக்குப் புறம்பாகப் பேசிவருகிறார். இது முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட முரசொலி மீது வைக்கும் மிக அபாண்டமான பொய் குற்றச்சாட்டாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x