Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு சேதமடைந்த நிலையில், தற்போது பூஞ்சான் நோய் தாக்கி, நெல்மணிகள் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் கரைவெட்டி, வெங்கனூர், கீழகாவட்டாங்குறிச்சி, திருமானூர், கள்ளூர், கீழகொளத்தூர், முடிகொண்டான், காரைப்பாக்கம், ஏலாக்குறிச்சி உட்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஹெக்டேரில் புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் போர்வெல் பாசனம் மூலம் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிவர், புரெவி புயல் தாக்கம் மற்றும் பொங்கல் வரை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. பின்னர், மழைநீர் வடிந்ததும் நெற்பயிர் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு தேவையான உரங்களை கொடுத்து, விவசாயிகள் பயிர்களை காத்துவந்த நிலையில், தற்போது கதிர்கள் வெளிவந்து உள்ளன.
ஆனால், தற்போது கதிர் வெளிவந்துள்ள நெற்பயிர்களில் உள்ள நெல்மணிகளில் நெல்பழம் என கூறப்படும் பூஞ்சான் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், நெல்மணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, வைக்கோல்களும் பாதிப்புக் குள்ளாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பூஞ்சான் பாதிக்கப்பட்ட நெல்மணிகளை நெல் கொள்முதல் நிலையங்கள், வியாபாரிகள் குறைவான விலைக்கே கொள்முதல் செய்வர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும்.
அதேபோல, வைக்கோலையும் விற்பனை செய்ய முடியாது. கால்நடை களும் பூஞ்சான் பாதிக்கப்பட்ட வயல்களின் வைக்கோல்களை உண்ணாது என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வேளாண்துறை அலுவலர் கள் கூறும்போது, ‘‘தொடர்மழை யின் காரணமாக தற்போது பூஞ்சான் நோய் தாக்கம் ஏற்படுகிறது. கதிர்வரும் தருவாயில் உள்ள வயல்களில் பூஞ்சான் நோய் தென்பட்டால், அதை தடுக்க உரக்கடைகளில் மருந்துகள் உள்ளன. ரகத்துக்கு ஏற்ப உரிய மருந்தை வாங்கி கதிர்கள் மேல் படும் விதமாக கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தால், பூஞ்சான் நோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும்’’ என தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT