Last Updated : 29 Jan, 2021 03:14 AM

2  

Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித்தரும் சுப்புராமனுக்கு பத்மஸ்ரீ விருது

திருச்சி

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித்தரும் ஸ்கோப் எம்.சுப்புராமனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கோப்' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எம்.சுப்புராமன் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

பத்மஸ்ரீ விருது பட்டியலில் என் பெயர் இருப்பதை அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மக்களுக்காக சேவை செய்தால், நிச்சயம் ஒருநாள் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற எனது நம்பிக்கைக்கு மெய்யாகியுள்ளது. கரூர் மாவட்டம் இனுங்கூர் அருகேயுள்ள புதுப்பட்டி எனது ஊர். இந்த கிராமத்தின் முதல் பட்டதாரி நான்தான். எனவே படிக்கும் வயதிலிருந்தே, கிராம முன்னேற்றத்துக்காக என்னால் முடிந்த பணிகளை செய்து வந்தேன்.

1986-ம் ஆண்டு ‘ஸ்கோப்' தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டேன். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வங்கிக் கடன், தொழில்வாய்ப்பு பெற்றுத் தந்தேன்.

இதற்காக கிராமம், கிராமமாக சென்று வந்தபோது, பெரும்பாலான ஊர்களில் அங்குள்ள பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், திறந்தவெளியில் மலம் கழிப்பதை பார்க்க முடிந்தது. பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. எனவே, எனது சமூகப் பயணம் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் சார்ந்ததாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான பணிகளைத் தொடங்கினேன்.

யுனிசெப், மத்திய, மாநில அரசுகள், தனியார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வீட்டின் அமைப்பு, இடவசதி, தண்ணீர் வசதி போன்றவைக்கு ஏற்ப பயனாளிகளின் ஒத்துழைப்புடன் 1 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளேன். கழிப்பறையிலிருந்து வெளியேறும் மலம், சிறுநீர் ஆகியவற்றை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிராமப்புறங்களில் 20 ஆயிரம் சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறைகளை அமைத்துக் கொடுத்தேன். மலத்தின் கசடுகளை உரமாக்கி, விவசாயத்துக்கு பயன்படுத்தவும் வழிவகை செய்தேன்.

கடந்த பல ஆண்டுகளாக இச்சேவையில் ஈடுபட்டு வரும் எங்கள் நிறுவனத்தின் முயற்சியை பாராட்டி, மத்திய அரசு தற்போது பத்ம விருது அளித்து மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளது.

மண்ணும், தண்ணீரும் மாசுபடுவதைத் தடுக்கும் முயற்சி தொடரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x