Published : 28 Jan 2021 09:20 PM
Last Updated : 28 Jan 2021 09:20 PM

ஓயாத அதிமுக மதுரை மாநகர் பிரிப்பு கோஷம்: தேர்தலுக்கு முன்பே இரண்டாகப் பிரிக்க வாய்ப்பு

மதுரை

திமுகவைப் போல் அதிமுகவிலும் மதுரை மாநகரை இரண்டு மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோஷம் ஓயாமல் வலியுறுத்தப்படுவதால் மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலக்கமடைந்துள்ளார்.

மதுரை மாவட்ட அதிமுக, மாநகரம், புறநகர் கிழக்கு மற்றும் புறநகர் மேற்கு ஆகிய மூன்று மாவட்டங்களாகச் செயல்படுகிறது. மாநகர மாவட்டச் செயலாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கு முன் ஒருங்கிணைந்த புறநகர் மாவட்டச் செயலாளராக வி.வி.ராஜன் செல்லப்பா இருந்தார். கட்சி நிர்வாக வசதிக்காக புறநகர் அதிமுக தலா 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி இரண்டு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனால், கூடுதலாக ஒரு மாவட்டம் உதயமானதால் கட்சியின் ஒவ்வொரு அணி பொறுப்புகளும் அதிகரித்து நிர்வாகிகளுக்குப் பதவிகள் வாரி வழங்கப்பட்டன.

அதேபோல் 4 தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாநகர் அதிமுகவையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும், அதனால், கிடைக்கக்கூடிய கூடுதல் மாவட்டப் பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்றரை ஆண்டாக உள்ளது. திமுகவில் மாநகரில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளை தலா 2 தொகுதிகளைக் கொண்டு ஏற்கெனவே வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரித்து இரண்டு மாநகர் மாவட்டங்கள் செயல்படுகின்றன.

தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்நிலையில் திமுகவைப் போல் மதுரை மாநகர அதிமுகவையும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கோஷம் ஏற்படும்போதெல்லாம், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கட்சித் தலைமையைச் சரிக்கட்டிச் சமாளித்து வருகிறார்.

ஆனால், தற்போது ஒரே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளும், துணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் கே.பழனிசாமியின் ஆதரவாளர்களும் ஒரே கோஷமாக மதுரை மாநகர் அதிமுகவை இரண்டாகப் பிரிக்க நெருக்கடி கொடுப்பதால் தேர்தலுக்கு முன்பே மதுரை மாநகர அதிமுக இரண்டாகப் பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘வி.வி.ராஜன் செல்லப்பா, அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகிய மூவருமே, மாவட்டச் செயலாளர் மற்றும் எம்எல்ஏவாக இருப்பதால் மற்றவர்கள் கட்சியில் வளர முடியவில்லை.

ஜெயலலிதா இருந்தபோது அடிக்கடி மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். புதியவர்களுக்குக் கட்சிப் பதவிகள் தேடி வரும். எதிர்பாராதவகையில் எம்எல்ஏ, மேயர், கவுன்சிலர் பதவிகள் கிடைக்கும். ஆனால், இனி அதுபோன்ற வாய்ப்பு நடக்கப் போவதில்லை. திமுகவைப் போல் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் கை காட்டும் நபர்ளுக்கு மட்டுமே கட்சிப் பதவிகளும், எம்எல்ஏக்களும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்குப் பிறகு கட்சியில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பதவி என்ற நிலை ஏற்பட்டதாலே கட்சியில் பதவிகளும், முக்கியத்துவம் கிடைக்காத வெறுப்பில்தான் பல அதிமுக நிர்வாகிகள், டிடிவி தினகரன் அமமுகவைத் தொடங்கியபோது அவருடன் சென்றுவிட்டனர். அதனால், கட்சியில் குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே பதவிகளும், அதிகாரமும் குவியாமல் அதைப் பரவலாக்க கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x