Published : 28 Jan 2021 08:46 PM
Last Updated : 28 Jan 2021 08:46 PM

தமிழகத்தில் 20% எம்.பி.சி. இட ஒதுக்கீடு; வன்னியர்களைவிட 4 முக்கியச் சமூகங்களே பயன்பெறுகின்றன: ராமதாஸ் 

சென்னை

27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் நடப்பதாக ரோகிணி ஆணையம் சுட்டிக்காட்டியதைப் போல 20% எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் நடைபெறும் சமூக நீதிச் சூறையாடல்கள் தமிழகத்தில் நடக்கின்றன. வன்னியர்களுக்குக் கிடைக்காமல் குறிப்பிட்ட 4 சமூகங்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கின்றன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:

“மத்தியில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. கல்வியில் 27% இட ஒதுக்கீடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நான் போராடியதால் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகளும், கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 14 ஆண்டுகளும் நிறைவடைந்துவிட்ட போதிலும், அதன் பயன்கள் இன்னும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்துச் சமூக மக்களையும் சென்றடையவில்லை.

இந்த அநீதி குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் ரோகிணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 27% இட ஒதுக்கீட்டின் பயன்கள் அந்த வகுப்பில் உள்ள 983 சாதிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அதற்கான புதிய தீர்வுகளை முன்வைத்துள்ளது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. இவற்றில் வெறும் 10 சமுதாயங்கள் மட்டுமே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன என்பதுதான் முதலாவது அதிர்ச்சித் தகவல் ஆகும்.

மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காடு மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளை கைப்பற்றிக் கொள்கின்றன. 102 சமுதாயங்கள் இன்னொரு 25 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் பெறுகின்றன.

994 சமுதாயங்களுக்கு ஓபிசி பிரிவில் 2.66 விழுக்காட்டை மட்டுமே கைப்பற்றுகின்றன. இவர்கள் தவிர பிற சமுதாயங்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ எந்தப் பயனும் கிடைப்பதில்லை என்பது நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் கண்டுபிடிப்பு ஆகும்.

இந்த சமூக நீதிச் சூறையாடலுக்கு முடிவுகட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாகப் பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதியரசர் ரோகிணி ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.

மத்தியில் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் சமூக நீதி எந்த அளவுக்குச் சூறையாடப்படுகிறதோ, அதேபோன்ற நிலைதான் தமிழ்நாட்டில் 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிலும் காணப்படுகிறது. 20% இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை வன்னியர் அல்லாத 4 சமுதாயங்கள்தான் எடுத்துக் கொள்கின்றன என்பது இப்போது புதிதாகக் கிடைத்திருக்கும் தகவல் ஆகும்.

27% இட ஒதுக்கீட்டில் நடைபெறும் சமூக நீதிச் சூறையாடல்கள் குறித்தும், அதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்தும் சுக்கா... மிளகா... சமூகநீதி? நூலின் 17-வது அத்தியாயத்தில் விரிவாக எழுதியுள்ளேன். கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி இதுகுறித்து விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். சமூக நீதியில் ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக வன்னிய இளைஞர்கள் அவற்றைப் படித்து அறிந்துகொண்டு, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x