Published : 28 Jan 2021 08:27 PM
Last Updated : 28 Jan 2021 08:27 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இடைக்காட்டூர் வைகை தடுப்பணை சீரமைக்கப்படாததால் குடிநீர் திட்டங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வைகை ஆற்றுப்படுகையில் உள்ள இடைக்காட்டூர் பகுதியில் நெல், கரும்பு, வாழை 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், ஆற்றில் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் திட்டங்களுக்காக 19 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து குடிநீர் திட்டங்களுக்காகவும், இடைக்காட்டூர், பதினெட்டான்கோட்டை, வெள்ளிமூஞ்சி, வெள்ளிக்குறிச்சி, அன்னியயேந்தல், முத்தனேந்தல், சிறுகுடி உட்பட கிராமங்கள் பயன்பெறும் வகையிலும் கடந்த 2006-ம் ஆண்டு ரூ.68 லட்சத்தில் இடைக்காட்டூர் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த அணை கட்டிய சில மாதங்களிலேயே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக அணையைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சமீபத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டும், தேக்க முடியவில்லை. இதனால் கோடைக்காலங்களில் குடிநீர் திட்டங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இடைக்காட்டூர் பகுதி மக்கள் கூறுகையில், "தரமில்லாததால் கட்டிய 6 மாதங்களிலேயே தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலமுறை கோரிக்கை வைத்தும் சீரமைக்கவில்லை. அணையைத் தரமின்றி கட்டிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் சென்றும் எங்கள் பகுதிக்குப் பயனில்லாமல் போனது.
மேலும், கடந்த காலங்களில் அணையில் தண்ணீர் தேக்க முடியாததால் குடிநீர் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகள் வற்றின. அணையில் தண்ணீர் தேங்கினால்தான் விவசாயக் கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இதன் மூலம் கோடைக் காலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால் அணையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்" என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT