Published : 28 Jan 2021 07:49 PM
Last Updated : 28 Jan 2021 07:49 PM
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர், கருணாநிதி நினைவிடத்திற்குக் கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சியைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல், வயிற்றெரிச்சலின் காரணமாக ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து திமுக வழக்குப் போட்டதாக முதல்வர் அண்ட புளுகைப் புளுகியுள்ளார் என்று ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்ட அறிக்கை:
''ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி உரையாற்றும்போது உண்மை பேசுவதற்குப் பதிலாக, “ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்குப் போட்டவர்" என திமுக தலைவர் ஸ்டாலின் மீது ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகப் பேசியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தை, ஜா-ஜெ. என்ற கோஷ்டி சண்டையில் அம்போ என்று விடப்பட்டபோது, 1989-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி, பெருந்தன்மையோடு எம்.ஜி.ஆர். நினைவிடத்தைப் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே பெருந்தன்மையோடுதான், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவாகரத்தில் நடந்துகொண்ட எங்கள் தலைவர் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போலப் பேசியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர், முத்தமிழறிஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு, கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சியைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலின் காரணமாக இப்படி அண்டப் புளுகை - ஆகாசப் புளுகைப் புளுகியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பினை அறிவித்தபோதும் சரி - அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி அறிவித்தபோதும் சரி, எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினோ அல்லது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களோ அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை.
ஆனால், ‘ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள், பழனிசாமி கூட்டணியில் இன்று இடம்பெற்றுள்ள பாமக கட்சியினர்தான் என்பதை ஏனோ பழனிசாமி ‘முழுப் பூசணிக்காயைச் சேற்றில் மறைப்பதைப் போல’ பேசியிருக்கிறார். இந்தப் போக்கு ஜெயலலிதாவுக்கு, இவர் செய்கின்ற பச்சை துரோகம் அல்லவா?
நான்காண்டு காலமாக ஆட்சியில் இருந்த இவர், இதுவரை இதுபற்றி வாய் திறக்காமல், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தொடர்ந்து இவர் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது.
முதல்வர் பழனிசாமியின் இப்போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. இனியும் இப்படிப்பட்ட பொய்களை பேசி வருவாரேயானால், இவர் மீது சட்ட நடவடிக்கையை திமுக எடுக்கும் என எச்சரிக்கிறேன்''.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT