Published : 28 Jan 2021 07:36 PM
Last Updated : 28 Jan 2021 07:36 PM
கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 153 யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.
கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்களை உள்ளடக்கியது கோவை வனக்கோட்டம். கோவையின் மேற்கு பக்கம் மலைச்சரிவுகளும், கிழக்குப் பக்கம் பட்டா நிலங்களும் இருப்பதால் இடைப்பட்ட மலையடிவாரப் பகுதிகளையே யானைகள் தங்கள் வாழ்விடத்துக்காகவும், உணவுத் தேவைக்காகவும் அதிகம் பயன்படுத்துகின்றன.
தமிழகத்தில் யானை-மனித மோதல் அதிகம் நடைபெறும் இடமாக கோவை வனக் கோட்டம் உள்ளதற்கு, அடிவாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் வந்துள்ள பெரிய அளவிலான கட்டுமானங்களும், விவசாய முறை மாற்றமும் காரணமாக இருந்து வருகின்றன.
உணவுப் பற்றாக்குறைக் காலங்களில் வேளாண் பயிர்கள் யானைகளை ஈர்ப்பதால் அவை உணவுக்காக வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியேறுகின்றன. அவ்வாறு தினந்தோறும் வெளியேறும் யானைகளை விரட்டுவது வனப் பணியாளர்களுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இவ்வாறு யானைகள் வெளியேறும்போது ஏற்பட்ட மோதலால் கடந்த 10 ஆண்டுகளில் கோவை வனக்கோட்டத்தில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், 10 ஆண்டுகளில் ஏற்பட்ட யானைகள் உயிரிழப்பு குறித்து கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தகவல்களைப் பெற்றுள்ளார்.
ஓராண்டில் 23 பேர் உயிரிழப்பு
இது தொடர்பாக கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம் அளித்த பதிலில், “2010-ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் மாதம் வரை மனித-விலங்கு மோதலில் கோவை வனக் கோட்டத்தில் மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 2019-2020ஆம் ஆண்டில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.3.59 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கோவை வனக்கோட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு, துப்பாக்கிச் சூடு, நோய்த் தாக்கம், யானைகளுக்கு இடையேயான மோதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு, கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் வரை மொத்தம் 153 யானைகள் கோவை வனக்கோட்டத்தில் உயிரிழந்துள்ளதாக ஆர்டிஐ மனுவுக்கு வனத்துறை அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT