Published : 28 Jan 2021 05:44 PM
Last Updated : 28 Jan 2021 05:44 PM
புதுச்சேரியில் இனி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் கட்சியிலிருந்து விலக மாட்டார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம், காந்தி மார்க்கெட் வளாகத்தில், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.18 லட்சத்து 43 ஆயிரத்து 537 மதிப்பில், கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஜன.28) நடைபெற்றது.
இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்டத் துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள், வணிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் முதல்வர் வி.நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தேர்தல் வாக்குறுதிகளை புதுச்சேரி அரசு 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளுக்குச் சலுகைகள் வழங்குவதில் முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது.
கரோனா தொற்றால் உயிரிழப்பின் விகிதம் மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் குறைவு. குணமடைவோர் விகிதம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை மத்திய அரசு கொடுத்தால் மக்களுக்குச் செலுத்தத் தயாராக உள்ளோம். இல்லாவிட்டால் மாநில அரசு மூலம் இலவசமாக புதுச்சேரி மக்களுக்குச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு உரிய நிதி வழங்காத நிலை, துணைநிலை ஆளுநர் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காத நிலை, எதிர்க்கட்சிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இவற்றையெல்லாம் மீறிப் பல்வேறு துறைகளில் புதுச்சேரி அரசு விருதுகளைப் பெற்றுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக 2 விருதுகளைப் பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் வெளியே செல்ல வேண்டும் என்பதற்காகப் பல காரணங்களைக் கூறி வருகிறார். அவர் துறை சார்ந்த நடவடிக்கைகள் எதிலும் நான் தலையிட்டதில்லை. எந்த அமைச்சரின் துறையிலும் தலையிடுவதில்லை. நான் என்னென்னெ கோப்புகளில் தலையிட்டேன் என அவர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாகக் குறை கூறக்கூடாது.
யார் யார் எந்தெந்தத் துறைகளில் எப்படிச் செயல்பட்டார்கள் என்பது புதுச்சேரி மாநில மக்களுக்குத் தெரியும். துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து எங்களுடன் இணைந்து போராட்டங்கள் நடத்திவிட்டு, நான் ஆளுநருடன் இணக்கமாகச் சென்றிருக்க வேண்டும் என இப்போது நமச்சிவாயம் கூறுவதை ஏற்க முடியாது. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஆனால், மத்திய அரசுதான் காங்கிரஸ் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கட்சித் தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள். அவர்கள் முடிவுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கீழ்மட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மொத்தம் 10 பேர் மட்டுமே விலகிச் சென்றுள்ளனர். இது புதிது அல்ல. எந்தச் சூழலிலும் கட்சியை வலுவாக உருவாக்குவதற்குத் தலைவர்களும், தொண்டர்களும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
இனிமேல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட யாரும் கண்டிப்பாக விலக மாட்டார்கள். புதுச்சேரியில் பாஜக வலுவற்ற கட்சி என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் யாரும் அக்கட்சிக்குச் செல்ல மாட்டார்கள். அக்கட்சிக்குச் செல்வோரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும்''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT