Published : 28 Jan 2021 04:42 PM
Last Updated : 28 Jan 2021 04:42 PM
கோவையில் டாஸ்மாக் கடை விற்பனையாளர், உதவியாளர் ஆகியோர் ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெறும்போது அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
கோவை ஈச்சனாரியில் இருந்து மலுமிச்சம்பட்டி எல் அண்டு டி பைபாஸ் சாலை நோக்கிச் செல்லும் வழியில் அரசு மதுபானக் கடை (எண்:2232) உள்ளது. இக்கடையின் விற்பனையாளராக லெனின் (43), உதவி விற்பனையாளராக சரவணன் (50) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். கடையை ஒட்டிய டாஸ்மாக் பார் மேலாளராக வினோத் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் லெனின், சரவணன் ஆகியோர், ''கடையின் நேரம்போக மீதமுள்ள நேரங்களில் மதுபானங்களை அளிக்கிறோம். அவற்றை அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக விற்றுக்கொள்ளலாம். அதற்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும்'' என்று வினோத்திடம் கூறியுள்ளனர்.
அதற்கு உடன்படாத வினோத், கோவை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரிடம் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் டி.எச்.கணேஷ் தலைமையிலான போலீஸார் ரசாயன பவுடர் தடவிய 70 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வினோத்திடம் அளித்து, லெனின், சரவணன் ஆகியோரிடம் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதை நேற்று இரவு இருவரும் வினோத்திடம் பெறும்போது மறைந்திருந்த போலீஸார், கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து, மதுபானக் கடையில் மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.8,600 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் இதுபோன்று, லஞ்சம் தொடர்பாகப் புகார் தெரிவிக்க 0422-2449550 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT