Published : 28 Jan 2021 03:42 PM
Last Updated : 28 Jan 2021 03:42 PM
கால்நடை மருத்துவரின் தவறான சிகிச்சையால் தனது நாய் உயிரிழந்ததாக நாயின் உரிமையாளர் பிரேத பரிசோதனைக்கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனு குறித்து பதிலளிக்க அரசு கால்நடை மருத்துவருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த சுமதி தாக்கல் செய்த மனுவில், தான் வளர்த்து வந்த ஒன்பது வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட போது, கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமா நிலையை அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
பின் நாயை பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து, கடம்பத்தூர் மருத்துவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்ததாகவும், அதன் பின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் தனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டதாகவும், அதன் காரணமாக தனது நாய் கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாயின் மரணத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், மருத்துவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பிப்ரவரி 1-ம் தேதிக்குள் மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கும், கால்நடைத் துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT