Published : 28 Jan 2021 02:57 PM
Last Updated : 28 Jan 2021 02:57 PM

பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: சிலை திறப்பு விழாவில் முதல்வர் அறிவிப்பு

சென்னை

ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக ஜெயலலிதா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

சென்னை, போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட "வேதா நிலையம்" நினைவு இல்லத்தினை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். அவ்வளாகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“ஆண்களுக்கு பெண்கள் சமம் என்று மகளிருக்கும் காக்கிச் சட்டை அணியச் செய்தார். மகளிர் காவல் நிலையங்களைத் திறந்தார். பெண் கமாண்டோ படையை அமைத்து உலகத்தையே தமிழகத்தின் பக்கம் உற்று நோக்கச் செய்தவர் ஜெயலலிதா. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைத்தவர்.

அவர் வழியில் இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு என்னும் முன்னோடித் திட்டமாக தமிழ்நாட்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவை மூலம் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்று பாடும் தமிழ்கூறும் நல்லுலகில், கிராமியக் கலை, எழுத்து, பத்திரிகை, நீதிமன்றம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வெற்றி பெற்று வருவது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் ஜெயலலிதாவைப்போல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பது, ஒரு பெண் மாபெரும் சக்தியாக மாற முடியும் என்பதை பறைசாற்றுகிறது. இந்திய அரசியலில் பெண் தலைவர்கள், பெண் ஆட்சியாளர்கள் குறைவு என்ற போதிலும், அந்தக் குறைகளையெல்லாம் ஈடு செய்து மாற்று சக்தியாக விளங்கியவர் ஜெயலலிதா.

துணை முதல்வர் குறிப்பிட்டதைப் போல, 2011-ல் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கின்ற போது, 32 சதவீதம் மாணவச் செல்வங்கள் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தனர். இப்போது அவரின் கல்விக்கு அதிக ஒதுக்கீடு செய்து கல்வியில் புரட்சி ஏற்படுத்தியதன் விளைவாக தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியத் திருநாட்டிலேயே உயர்கல்வி படிப்பவர்களில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றது.

ஒரு தலைவனுக்கு உரிய ஆளுமைகளாக என்னென்ன கூறப்படுமோ அவை அத்தனையும் ஜெயலலிதாவின் இயல்பான குணங்களாக இருந்துள்ளது என்பது இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணம் ஆகும்.

இத்தகைய மாபெரும் மக்கள் தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரின் தன்னலமில்லா வாழ்விற்குப் பொருத்தமாக, நேற்றைய தினம் மெரினா கடற்கரையில், மிகப்பெரிய நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று, ஆளுமை திறன்மிக்க, அச்சம் என்ற சொல் அறியாத, அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள """"வேதா நிலையம்"" நினைவு இல்லத்தை இன்று நாங்கள் திறந்து வைத்திருக்கின்றோம். அந்த நினைவு இல்லத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக அதையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கின்றோம்.

மேலும், ஜெயலலிதாவின் திருநாமத்தின் பெயரில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் பிரம்மாண்டமான அழகிய தத்ரூபமான அவரின் முழு திருவுருவச் சிலையை இன்றைக்கு நாங்கள் திறந்து வைத்திருக்கின்றோம். அவருக்கு பெருமை சேர்க்கின்ற அரசு இந்த அரசு என்பதை நினைவு கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்

ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையை இங்கே சென்னையில் நாம் பிரம்மாண்டமாக அமைத்து திறந்திருக்கின்றோம். அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24ம் நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக ஜெயலலிதா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுசமயம், இந்த வளாகத்தில் நிறுவப்பட்ட அவரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x