Published : 28 Jan 2021 01:06 PM
Last Updated : 28 Jan 2021 01:06 PM
ரயில்களில் நிறுத்தப்பட்ட நடமாடும் உணவு வழங்கல் சேவையை தொடங்க ஏற்கெனவே டெண்டர் எடுத்த நிறுவனங்களின் பொருளாதார நெருக்கடிகளை கணக்கில் கொண்டு ரயில்வே நான்கு வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நடமாடும் உணவு வழங்கல் சேவையையும் நிறுத்தி வைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ரயில்களில் நடமாடும் உணவு வழங்கல் சேவைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, இந்திய ரயில்வே, டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய டெண்டரை ரத்து செய்து, உணவு வழங்கல் சேவைக்காக கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களை அனுமதிக்க கோரி இந்தியன் ரயில்வே நடமாடும் உணவு வழங்குவோர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது, “ரயில்வேயில் பல சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் உணவு வழங்கல் சேவை இதுவரை துவங்கப்படவில்லை எனவும், இதுசம்பந்தமாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மனுதாரர் சங்கம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், புதிய டெண்டர் என்பது சிறப்பு ரயில்களுக்கு மட்டும் தான் எனவும், வழக்கமான ரயில்களில் உணவு வழங்கலை அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கரோனா ஊரடங்கால் ரயில்வே உணவு வழங்கல் சேவையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, அவர்களின் சேவையை மீண்டும் துவங்குவது தொடர்பாக நான்கு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென இந்தியன் ரயில்வேக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT