Published : 23 Jun 2014 10:30 AM
Last Updated : 23 Jun 2014 10:30 AM

கொடைக்கானலில் செயல்படத் தொடங்கியது 12-வது வனவிலங்குகள் சரணாலயம்: 33 அரியவகை விலங்குகள் வசிப்பதாக தகவல்

கொடைக்கானல் வனப்பகுதி தமிழகத்தின் 12-வது வனவிலங்குகள் சரணாலயமாக செயல்படத் தொடங்கியது. இந்த சரணாலயத்தில் யானைகள், சிறுத்தைப் புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட 33 வகை வனவிலங்குகள் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளன.

சர்வதேச சுற்றுலா தலம்

திண்டுக்கல் மாவட்டம், பழநி மலையில் கொடைக்கானல் அமைந்துள்ளது. இந்த பழநி மலை திருப்பூர் மாவட்டம் அமராவதியில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம் வழியாக தேனி மாவட்டம் போடி வரை மொத்தம் 2,012 ச.கி.மீ. பரப்பில், 65 கி.மீ. நீளம், 45 கி.மீ. அகலத்தில் உள்ளது.

இந்த மலையில் உள்ள கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தைப் புலி, கரடி, புள்ளிமான், காட்டெருமைகள் உள்பட பல்வேறு அரியவகை வனவிலங்குகள் வாழ்கின்றன. சில ஆண்டுகளாக இந்த வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் போர்வையில் சமூகவிரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடி வந்தனர்.

முதல்வர் அறிவிப்பு

அதனால், கொடைக்கானல் அரியவகை வனவிலங்குகளைப் பாதுகாக்க கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் ஜெயலலிதா, கொடைக்கானல் வனப்பகுதியை தமிழகத்தின் 12-வது வனவிலங்குகள் சரணாலயமாக அறிவித்தார். இந்த சரணாலயம் எல்லைகள் வரையறுக்கப்பட்டு தற்போது செயல்படத் தொடங்கியது.

7 வனச்சரகங்கள் உள்ளன

கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட பேரிஜம், மன்னவனூர், பூம்பாறை, வந்தேரவு, பெரும்பள்ளம், பெரியகுளம் ஆகிய 7 வனச்சரகங்கள் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயத்தில் இணைக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் யானை, சிறுத்தைப் புலி, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட 33 வகை வனவிலங்குகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: சரணாலயத் திலிருந்து வனவிலங்குகள் மலைக் கிராமங்கள், நகரப் பகுதிகளில் நுழையாமல் தடுக்க பெருமாள்மலை, செண்பகனூர், மன்னவனூர், பூம்பாறை மற்றும் கும்பக்கரை பகுதிகளில் வனப்பகுதியையும், மலைக்கிராமங்களையும் பிரிக்கும் வகையில் 5 மீட்டர் ஆழமும், 3 மீட்டர் நீளமும் கொண்ட அகழிகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

பொதுவாக வனவிலங்குகள், மலைக்கிராமங்களில் தங்களுக்குப் பிடித்த பயிர்கள் பயிரிடப்பட்டால் அவற்றை நுகர்ந்து சாப்பிட படையெடுக்கின்றன. அதனால் இனி சரணாலயத்தைச் சுற்றியுள்ள பட்டா நிலங்களில் விவசாயிகள், வனத்துறையினர் அறிவுறுத்தும் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்ய முடியும்.

தாங்கள் விரும்பிய பயிர்களை சாகுபடி செய்ய முடியாது. கால்நடை மேய்ச்சல், விறகு எடுக்க சரணாலயத்தில் வர முடியாது என்றார்.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, ஏரி, குணா குகை, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட 16 சுற்றுலா தலங்கள், பேரிஜம் பகுதியில் 4 சுற்றுலா தலங்கள் மற்றும் நடந்துசென்று பார்க்கக்கூடிய வகையில் 4 வனப்பகுதி சுற்றுலா தலங்கள் உள்பட மொத்தம் கொடைக்கானல் மலையில் 25 சுற்றுலா தலங்கள் உள்ளன.

தற்போது கொடைக்கானல் மலை சரணாலயமாக செயல்படத் தொடங்கியுள்ளதால் அனுமதிக்கப்பட்ட இந்த சுற்றுலாத் தலங்கள் தவிர வனப்பகுதியின் மற்ற இடங்களில் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதை சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்துவதற்காக கொடைக்கானல் மலைப்பாதைகள், மலைக்கிராமங்களில் சரணாலய எல்லைப் பகுதியில் விழிப்புணர்வு தகவல் பலகை வைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x