Last Updated : 27 Jan, 2021 07:48 PM

1  

Published : 27 Jan 2021 07:48 PM
Last Updated : 27 Jan 2021 07:48 PM

கல்லல் அருகே வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா: இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பாரம்பரிய நெல் ரகமாக மாப்பிள்ளை சம்பா மழை வெள்ளத்திலும் தாக்குப் பிடித்ததால், அதைப் பயிரிட்ட விவசாயியை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

இந்தியாவில் வெள்ளைக்கார், கம்பஞ்சம்பா, சிவப்பு குருவிக்கார், செம்பாளை, கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தன. இயற்கை உரங்களால் விளைந்த இந்த ரகங்கள் ரசாயன உரங்களுக்கு ஈடுகொடுக்கவில்லை. மேலும் நீண்டகாலப் பயிர் என்பதால் காலப்போக்கில் விவசாயிகள் புதிய குறுகிய கால ரகங்களுக்கு மாறினர்.

தற்போது மீண்டும் பாரம்பரிய நெல் வகைகளுக்கு மாறி வருகின்றனர். 'மாப்பிள்ளை சம்பா' நெல் ரகம் தனித்துவம் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என, டாக்டர்கள் கூறுகின்றனர். அபூர்வமாக மாறிவிட்ட இந்த ரக நெல் ரகத்தை கல்லல் அருகே கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன் (60) இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார். அவர் ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ளார். நெற்பயிர்கள் ஆறு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளன.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கல்லல் வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் நீரில் மூழ்கின. ஆனால் மாப்பிள்ளை சம்பா மழை வெள்ளத்தில் பாதிக்கப்படவில்லை. இதைப் பயிரிட்ட விவசாயி மார்க்கண்டேயனை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

இதுகுறித்து விவசாயி மார்க்கண்டேயன் கூறியதாவது:

"இந்தியன் வங்கியில் பணிபுரிந்த நான் விருப்ப ஓய்வு பெற்று கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பாரம்பரிய ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாப்பிள்ளை சம்பா பயிரிட்டேன். வேப்பங்குளம் முன்னோடி விவசாயி திருச்செல்வம், குன்றக்குடி வேளாண் மையத் தலைவர் செந்தூர்குமரன் ஆகியோர் எனக்கு உதவி வருகின்றனர்.

விவசாயி மார்க்கண்டேயன்

மாப்பிள்ளை சம்பாவில் உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகள் உள்ளன. அரிசி சிவப்பாகதான் இருக்கும். ஒற்றை நாற்றாக நடவு செய்தால் போதும். வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதத்திற்கு தண்ணீர் இல்லாவிட்டால் கூட பயிர்கள் காயாது. அதேபோல் கனமழை பெய்து நீரில் மூழ்கினாலும் நீண்ட நாட்களுக்கு அழுகாது.

இயற்கைச் சீற்றங்களை தாங்கி வளரக்கூடியது. பூச்சித் தாக்குதலும் இருக்காது. அடியுரமாக மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தினோம். 'பஞ்சகவ்யத்தை' தெளித்தோம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தவில்லை. 150 நாட்களில் அறுவடை செய்யலாம். வெளிச்சந்தையிலும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x