Published : 27 Jan 2021 05:41 PM
Last Updated : 27 Jan 2021 05:41 PM
சசிகலா விடுதலையை ஆதரித்து போஸ்டர் அடித்து வரவேற்ற நெல்லை அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவின் அதிகார மையமாக விளங்கியவர். அவரது தயவு கிடைக்காதா எனக் காத்திருந்த கட்சியினர் இருந்த காலம் ஒன்று உண்டு.
அதிமுக 2016-ல் ஆட்சி அமைத்தபோது பலருக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் வாய்ப்பு வழங்கியவர் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் எனத் தற்போதைய அதிமுக தலைவர்கள் நேரில் வந்து வலியுறுத்தினர்.
அதன் பின்னர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததால் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சிறைக்குச் சென்றார் சசிகலா.
சில மாதங்களில் ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தார். டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டார். சசிகலாவைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆனார்கள். 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என டெல்லியில் முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார்.
இந்நிலையில் இன்று சசிகலா விடுதலையானார். அவரது விடுதலைக்குப் பின் அதிமுகவிலிருந்து பலர் அவரை நோக்கி வெளிப்படையாக வருவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.
இதையடுத்து அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு:
“அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டு, ஆளும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிக் கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணியம் ராஜா இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு ஓபிஎஸ்- இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...