Published : 27 Jan 2021 04:43 PM
Last Updated : 27 Jan 2021 04:43 PM
234 தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சென்னை மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் தலா 117 ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடுகின்றனர். வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை அப்போது அறிவிப்பேன்.
தேசியக் கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எங்கள் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்குகிறது. ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்பதைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகவே திமுகவில் சுற்றுச்சூழல் பாசறை அமைக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு அரசுத் தொழிலாக்கப்படும் என்று நான் பேசியபோது கேலி செய்த கட்சிகள், தற்போது இதையே பேசி வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும், திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் வாக்குக்காகச் செய்கிறார்கள். நாங்கள் அதை உணர்வாகச் செய்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு.
திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு முன் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதைச் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது. தென் மாநிலங்களில் தங்களுடைய இருப்பைத் தக்க வைக்க முயற்சி செய்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாகக் களத்தில் இறங்கியிருக்கும்.
அதே நேரத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் செவி சாய்க்காது. 4 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றதைக் கண்டும், காணாமல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள்தான் இதைத் தடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''.
இவ்வாறு சீமான் கூறினார்.
அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது? நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? வாக்காளர்களை எவ்வாறு அணுகி வாக்குச் சேகரிப்பது? என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT