Published : 27 Jan 2021 03:32 PM
Last Updated : 27 Jan 2021 03:32 PM

ஜெயலலிதா மறைவு மர்மம்; விசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா?-ஸ்டாலின் கேள்வி

சென்னை

அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர் எவ்வாறு மறைந்தார் என்பது இதுவரையில் மர்மமாக உள்ளது, இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா என்பது தான் என்னுடைய கேள்வி என ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் பேசியதாவது:

மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்றைக்கு நடக்கிறது. அதை நான் வேண்டாமென்று மறுக்கவில்லை. ஆனால் நடத்தக் கூடியவர்கள் யார்? அந்த நினைவிடத்திற்கு உரியவர் யார்? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

குற்றம் புரிந்து, ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடக்கின்றது. அதனைத் திறந்து வைப்பவர் உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சொல்லி, அவருடைய ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கின்ற காரணத்தினால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இது தான் இன்றைய நிலை.

ஜெயலலிதா மறைந்து 50 மாதங்கள் ஆகிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் எப்படி மறைந்தார்? என்பது தொடர்பாக ஒரு தர்மயுத்தம் நடந்தது. விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தத் தர்மயுத்தம் நடைபெற்றது. அது நடைபெற்று 48 மாதங்கள் ஆகியது. அதன்பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு 42 மாதங்கள் ஆகியது.

விசாரணை வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான் கேட்டார். அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அழைப்பு விடுத்து என்று 25 மாதங்கள் ஆகிறது. பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவர் செல்லவில்லை.

இந்த லட்சணத்தில் நேற்று ஆறுமுகசாமி கமிஷனுக்கு பத்தாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் இறந்து 4 ஆண்டு ஆகிறது. இதுவரையில் உண்மை வெளிவரவில்லை.

ஆனால் அவர்கள் பாக்கெட்டில் அம்மையாரின் புகைப்படம் இருக்கிறது. விழாக்களில் அம்மாவின் படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் எவ்வாறு மறைந்தார் என்பது இதுவரையில் மர்மமாக உள்ளது. இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா? என்பது தான் என்னுடைய கேள்வி. இதனைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x