Published : 27 Jan 2021 02:31 PM
Last Updated : 27 Jan 2021 02:31 PM
மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத் திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்டச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மாற்றுக் கட்சியில் இருந்து வந்த பலரும், திமுகவில் முக்கியத்துவம் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் திண்டிவனத்தில் நடைபெற்ற விழுப்புரம் வடக்கு மாவட்ட அவசர செயற்குழுக் கூட்டத்தில் வெடித்தது.
இதுகுறித்துத் திமுகவினரிடம் கேட்டபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
கூட்டத்தில் மாவட்டச் செயலாளரான எம்எல்ஏ மஸ்தான் பேசும்போது, 'மாற்றுக் கட்சியில் (தேமுதிக) இருந்து வந்த தலைமைத் தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா மற்றும் சிலர், மரக்காணம் ஒன்றியச் செயலாளர் நல்லுார் கண்ணன் வீட்டிற்குச் சென்று, சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். செஞ்சி சிவா ஒன்றியச் செயலாளரை சந்தித்துப் பேசியது ஏன், அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இஷ்டத்திற்குச் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. விரைவில் நல்லுார் கண்ணன் அவைத் தலைவராக நியமிக்கப்படுவார்' என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்து செஞ்சி சிவா பேசும்போது, 'ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவது என நல்லுார் கண்ணன் முடிவு செய்தார். இதனை அறிந்து அவரைச் சந்தித்து, ஸ்டாலின் கொடுத்த பதவியை மறுக்கக் கூடாது. அமைதியாக இருந்து சிறப்பாகத் தேர்தல் பணியாற்றுங்கள், ஸ்டாலின் யாருக்கு எந்தப் பதவி கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து முடிவு செய்வார் எனச் சமாதானம் செய்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது?' என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஒன்றியச் செயலாளர் நல்லுார் கண்ணன், 'ஒன்றியத்தைப் பிரித்ததால், செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தேன். இதையறிந்த செஞ்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என்னைச் சந்தித்து, சமாதானம் செய்தனர். கட்சிக்காகத் தொடர்ந்து உழைப்பவர்களுக்கு, கண்டிப்பாக உரிய அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்தனர். மற்றபடி கட்சிக்கு விரோதமாக எதுவும் பேசவில்லை' என்று கூறினார்.
இவ்வாறு திமுக தரப்பில் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்டச் செயலாளரான எம்எல்ஏ மஸ்தானிடம் கேட்டபோது, ''மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்தவர்கள் அவர்கள் இருந்த கட்சியில் கடுமையாக உழைத்தவர்கள். அவர்கள் இருந்த கட்சி திமுக கூட்டணியில் இல்லாதபோது, கலைஞர் , திமுக தலைவரான ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்துப் பேசியவர்கள்தான். தற்போது அவர்களுக்கு திமுகவில் உரிய மரியாதை அளிக்கப்படும்போது, அவர்களே கலைஞரையும், ஸ்டாலினையும் புகழ்ந்து பேசுகின்றனர்.
இதனால் தற்போது மாற்றுக் கட்சியில் அதிருப்தியுடன் உள்ளவர்கள்கூட திமுகவில் இணைந்து கட்சியைப் பலப்படுத்தி, வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைப்பார்கள்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்துத் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா கூறும்போது, ''கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை என்ற காரணத்திற்காக நாங்கள் வெளியே வந்தோம். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் 2016-ம் ஆண்டு வெளியேறி மீண்டும் தாய்க் கட்சிக்கு வந்தோம். எங்களுடன் வந்தவர்களில் பலர் கட்சிப் பதவிகூட இல்லாமல் இருக்கிறார்கள்.
2016-ம் ஆண்டிலேயே ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநாடு வைத்துத் திமுகவில் இணைந்தோம். திமுகவில் அனைவரும் எங்களுடன் இணக்கமாக உள்ளனர். மாவட்டச் செயலாளரான மஸ்தான் மட்டும்தான் எங்களை வேறுபடுத்திப் பார்க்கிறார். இதுகுறித்துக் கூட்டத்தில் மாவட்டச் செயலாலர் மஸ்தான் பேசும்போது, மதிமுகவில் இருந்து வந்த மயிலம் தொகுதி திமுக எம்எல்ஏ மாசிலாமணி, பாமகவில் இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ்செல்வன், அதிமுகவில் இருந்துவந்த முன்னாள் சேர்மன் வசந்தா ஆகியோர் தர்ம சங்கடமாக நெளிந்தனர். ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்து மாநில அளவில் பொறுப்பு வகிப்பவர்கள் அவமானத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT