Published : 13 Nov 2015 04:21 PM
Last Updated : 13 Nov 2015 04:21 PM
பிராய்லர் கோழி மீது இருந்த மோகம் மக்கள் மத்தியில் மாறத் தொடங்கியதை அடுத்து, நாட்டுக் கோழிகளின் தேவை அதிகரித்துள்ளது. பிராய்லர் கோழியை விட இதன் விலை இருமடங்கு உயர்ந்திருந்தாலும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
அசைவ உணவை வாரம் ஒருமுறையாவது ருசி பார்த்துவிட வேண்டும் என்பது பெரும்பாலான அசைவப் பிரியர்களின் விருப்பமாக உள்ளது. ஆடு, கோழி, மீன் என அவரவர் வசதிக்கேற்ப வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இதில் ஆட்டு இறைச்சியின் விலை (தனி இறைச்சி) அதிகபட்சமாக கிலோ ரூ. 500-க்கு மேல் விற்பனையாகிறது.. இதனால் நடுத்தர குடும்பத்தினர் கூட, எப்போதாவது ஒருமுறைதான் ஆட்டிறைச்சி வாங்குகின்றனர். மற்ற நேரங்களில், சுலபமாகக் கிடைக்கும் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்குகின்றனர். இதன் விலை, அதிகபட்சமாக கிலோ ரூ. 140-க்கு விற்பதால், சிறிய கிராமத்தில் கூட ஓரிண்டு பிராய்லர் கோழி கடைகளை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக பிராய்லர் கோழி இறைச்சி பற்றி வரும் தகவல்கள், சந்தேகங்கள் மக்களை மனமாற்றத்திற்கு ஆளாக்கி உள்ளது. நாட்டுக்கோழி இறைச்சியில் கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பதும் விற்பனை அதிகரிப்பதற்கு காரணம். மேலும், அரிசியில் இருந்து பழமையான சிறுதானிய உணவுக்கு மாற முயற்சி மேற்கொண்டதால், திடீரென சிறுதானிய உணவு மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதேபோல, தற்போது பிராய்லர் கோழியில் இருந்து பாரம்பரிய நாட்டுக்கோழி இறைச்சிக்கு மக்கள் மாறி வருவதால் இதன் தேவையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி விலை இருமடங்காக உயர்ந்து, தற்போது உயிருடன் கிலோ ரூ. 300-க்கு விற்கிறது. இதில் கழிவுபோக முக்கால் கிலோ இறைச்சி கிடைக்கும். நாட்டுக் கோழி உற்பத்தியை பெருக்கா விட்டால், அதன் விலை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் நாட்டுக் கோழி வியாபாரி எஸ். அமலநாதன் கூறியதாவது:
மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்வதால் தேவைக்கேற்ப நாட்டுக்கோழி கிடைப்பதில்லை. தட்டுப்பாடாகத்தான் உள்ளது. இதனால், இப்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.
திண்டுக்கல், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் டாக்டர் எஸ். சிவசீலன் கூறியது:
மக்களிடம் பிராய்லர் கோழி மீதான மனநிலை மாறி நாட்டுக் கோழி மீது திரும்பி வருகிறது. பிராய்லர் கோழியை விட இரண்டு மடங்கு விலை அதிகம் என்றாலும், அதை நாடிச் செல்லத் தொடங்கி விட்டனர். நாட்டுக்கோழியின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் வழங்கு கிறது. கிராமப்புறங்களில் கோழிக் குஞ்சுகள் வழங்கி, அவற்றை சிறுதொழில் போல வீடுகளிலேயே வளர்த்து அதன் மூலம் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை வருவாய் பார்க்க வழிவகுக்கிறது.
நாட்டுக்கோழி உற்பத்தியை எவ்வளவுதான் அதிகரித்தாலும், தற்போதைக்கு தேவையை பூர்த்திசெய்ய முடியாதநிலை தான் உள்ளது. நாளுக்கு நாள் நாட்டுக்கோழிகளின் தேவை அதிகரித்து வருகிறது, என்றார்.
நாட்டுக்கோழியை எளிதில் கண்டறியலாம்
டாக்டர் சிவசீலன் மேலும் கூறியதாவது:
நாட்டுக்கோழியிலும் பிராய்லர் வகைபோல கலப்பினக் கோழிகள் விற்பனைக்கு வருகிறது. கலப்பின வகை கோழிகளை பார்ப்பதற்கும், நாட்டுக்கோழிகள் போலவே இருக்கும். உண்மையிலேயே நாட்டுக்கோழி தானா எனக் கண்டறிய அதன் இறக்கைகளை பார்க்கவேண்டும்.
கலப்பின கோழியின் இறக்கைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். ஆனால் நாட்டுக்கோழியில் பச்சை, வெள்ளை, கருப்பு, சாம்பல், மஞ்சள் நிறம் என அனைத்து நிறங்களுடைய இறக்கைகளும் ஒரு கோழியில் இருக்கும். இதை கொண்டு அசல் நாட்டுக்கோழி என்பதை எளிதில் கண்டறியலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT