Published : 26 Jan 2021 07:53 PM
Last Updated : 26 Jan 2021 07:53 PM
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டிராக்டர், மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குடியரசு தினமான நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டப் போராட்டக் குழு சார்பில் கோவில்பட்டியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
மேலும், விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், ஒரு டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி வழங்கினர்.
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணி தொடக்கமாக, மின்சார திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். 2016-ம் ஆண்டு முதல் பயிர்க் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.
2019-2020ஆம் ஆண்டுக்கான பயிர் இழப்பீடு உடனே வழங்க வேண்டும். நடப்பு பருவத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோஷங்கள் முழங்கினர்.
தொடர்ந்து காந்தி மைதானத்தில் இருந்து மாவட்டப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் எஸ்.நல்லையா தலைமையில் தொடங்கிய பேரணி, கதிரேசன் கோவில் ரோடு, ஏ.கே.எஸ்.தியேட்டர் ரோடு வழியாகப் பயணியர் விடுதி முன்பு முடிவடைந்தது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பி.மணி, மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் துணைத் தலைவர் க.தமிழரசன், தொ.மு.ச.வைச் சேர்ந்த கே.ஜி.மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டிராக்டர் பேரணியை முன்னிட்டு மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன், ஆய்வாளர்கள் சுதேசன், அய்யப்பன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT