Published : 26 Jan 2021 06:49 PM
Last Updated : 26 Jan 2021 06:49 PM
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலப் பொதுக்குழுக் கூட்டம், குனியமுத்தூரில் இன்று நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் காஞ்சி ப.அப்துல் சமது, மாநிலப் பொருளாளர் சபியுல்லா கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக மாநிலம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியால் 7 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைத் தேர்தல் பணிக்குத் தயார்படுத்தும் வகையில், கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் உறுதியாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்றவற்றால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டன.
கடந்த 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.327 கோடியில் கோவையில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது 12 ஆண்டுகள் ஆகியும் அத்திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மாநகரில் குடிநீர் விநியோகத்திற்காக சூயஸ் நிறுவனத்துடன் ரூ.3,500 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவை நிச்சயம் பூர்த்தியாகாது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்குத் தலைமைச் செயல் அலுவலர் பணியிடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. பெரியகுளம், குறிச்சி, வாலாங்குளம் போன்றவை தரமற்ற பொருட்களைக் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.
கோவைக்கு வந்த தமிழக முதல்வர், 'தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. அதிமுக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்' என்றார். ஆனால் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டது. மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார் என்றார். இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்யவே ஆதரவு அளிப்பார்கள்''.
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT