Published : 26 Jan 2021 02:58 PM
Last Updated : 26 Jan 2021 02:58 PM
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காரைக்காலில் இன்று (ஜன.26) விவசாயிகள், டிராக்டர் பேரணியை நடத்தினர்.
காரைக்கால் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில், மாவட்ட எல்லைப் பகுதியான பூவம் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணியை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''விவசாயிகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு கண்டிப்பாகத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாத நிலையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிகளில் பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்'' என்றார்.
கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு, அம்பகரத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று காரைக்கால் மதகடி பகுதியில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகே பேரணி நிறைவு பெற்றது. பேரணியில் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணி:
இதேபோல விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் மேலையூர் கிராமத்திலிருந்து தொடங்கி, பல்வேறு முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று காரைக்கால் மதகடி சிங்காரவேலர் சிலை அருகில் நிறைவு பெற்றது. இதில் சில டிராக்டர்களும் பங்கேற்றன. இப்பேரணிக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம் அன்சாரி தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT