Published : 26 Jan 2021 02:25 PM
Last Updated : 26 Jan 2021 02:25 PM
நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் 63 போலீஸாருக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் மூவர்ண பலூன்களைப் பறக்கவிட்டார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 63 காவலர்களுக்குத் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வழங்கி கவுரவித்தார். மேலும், பணியில் சிறப்பிடம் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, இந்திய மருத்துவம், மற்றும் ஓமியோபதி துறை, சித்தா, மருத்துவம், மற்றும் ஊரக நலப்பணிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தொழில் வணிகத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி, மற்றும் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 34 அரசு அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
விபத்தின்றி 20 ஆண்டுகள் மாசற்ற பணி புரிந்தமைக்காக 6 ஓட்டுநர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும், 10 வருடம் அப்பழுக்கற்ற பணிபுரிந்தமைக்காக இரு ஓட்டுநர்களுக்கு ரூ.500 மதிப்பிலான சிறுசேமிப்புப் பத்திரங்களையும் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஷரண்யா, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பயிற்சி உதவி ஆட்சியர் ரிஷாப், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT