Published : 26 Jan 2021 12:56 PM
Last Updated : 26 Jan 2021 12:56 PM
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 60 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் குடியரசு நாளான இன்று மாபெரும் டிராக்டா் பேரணியை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டா் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, பேரணி செல்வதற்காக மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தென்னூர் புதிய சாலையில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய அரசியல் கட்சிகளின் பல்வேறு அணிகள், பல்வேறு தொழிற்சங்கங்கள், முஸ்லிம் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் இருசக்கர வாகனங்களுடன் திரண்டனர்.
எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகில் இருந்து தொடங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாநகராட்சி அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையம், ஜங்ஷன் ரவுண்டானா வழியாக மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை வரை பேரணி நடத்தி, அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
பேரணிக்கு போலீஸார் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி பேரணி செல்லத் திட்டமிட்டிருந்ததால், அதைத் தடுக்கும் நோக்கில் மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம்- ஒழுங்கு) அ.பவன்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ்.ஜோசப் நெல்சன் (தொமுச), எஸ்.ரங்கராஜன் (சிஐடியு), கே.சுரேஷ் (ஏஐடியுசி), கே.வெங்கட்நாராயணன் (ஐஎன்டியுசி), எப்.எஸ்.ஜான்சன் (எச்எம்எஸ்), மகேந்திரன் (ஏஐசிசிடியு), கே.சி.பாண்டியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), சிவ.சூரியன் (அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் தலைமையில் பேரணி புறப்படத் தயாரானபோது, போலீஸார் தடுப்புகளை வைத்து பேரணி செல்லக் கூடாது என்று தடுத்தனர்.
இதனால், பேரணி செல்ல முயன்றவர்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவர்கள், ஒரு கட்டத்தில் போலீஸாரின் தடுப்புகளை மீறி பேரணி செல்ல முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு நேரிட்டது. அந்தப் பகுதியே போர்க்களம்போல் மாறியது. தொடர்ந்து, போலீஸாரின் தடுப்புகளைத் தள்ளிவிட்டு ஏற்கெனவே திட்டமிட்ட பாதை வழியாக இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு பேரணி நிறைவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்து அனைவரும் கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதி வழியில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். பேரணியில் பங்கேற்ற அனைவரும் தேசியக் கொடிகளை ஏந்தியிருந்தோம். ஆனால், தேசியக் கொடி ஏந்திச் சென்ற பேரணியைத் தடுத்ததன் மூலம் குடியரசு நாளில் தேசியக் கொடியை போலீஸார் அவமதிப்பு செய்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT