Published : 26 Jan 2021 11:10 AM
Last Updated : 26 Jan 2021 11:10 AM
நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை, காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தேசியக் கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். பின்னர் அணிவகுப்பு மரியாதை, அலங்கார ஊர்தி மரியாதையை ஏற்றார். விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள், குடியரசு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
நாட்டின் 72-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தில் ஆளுநரும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வரும் கொடியேற்றுவது வழக்கம். அதன்படி இன்று குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் சென்னை கடற்கரை, காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த குடியரசு தின விழா பந்தலில் தேசியக்கொடியை ஏற்றினார்.
சரியாக காலை 8 மணிக்கு அவர் கொடியை ஏற்றினார். அப்போது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
முன்னதாக விழா பந்தலுக்கு வந்த அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முப்படைத் தலைவர்கள், காவல் உயர் அதிகாரிகள் அறிமுகத்துக்குப் பின் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைத்தார்.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். முதலில் வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவிய விங் கமாண்டர் தலைமையில் விமானப்படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து லெப்டினன்ட் கர்னல் தலைமையில் ஹேமந்தராஜ் தலைமையில் ராணுவ வீரர்களும், ராணுவ கூட்டிசைக் குழுவும், உதவி கமாண்டர் சங்கர் தலைமையில் கப்பற்படை வீரர்களும், வான்படைப் பிரிவும், பின்னர் கடற்படையும் ஊர்தி வந்தன.
அடுத்து வான்படை சாதனை ஊர்தியும், கடலோரக் காவல்படை வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்கள் படையும், மத்திய ரிசர்வ் காவல்படை இசைக்குழுவும், மத்திய தொழில் பாதுகாப்புப் பிரிவு, ரயில்வே பாதுகாப்புப் பிரிவு, காவல்துறை படைப்பிரிவினர் என அணிவகுத்து வந்தனர்.
தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பெண்கள் பிரிவு, காவல் கூட்டு முரசிசைக்குழு, தமிழ்நாடு மீட்பு பேரிடர் குழு, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, கடலோரப் பாதுகாப்புக் குழு படையினர், கமாண்டோ பிரிவு, நீலகிரி படைப் பிரிவினர், குதிரைப்படை பிரிவினர், வனத்துறையினர், சிறைத்துறையினர், தீயணைப்புத் துறை, ஊர்க்காவல்படை பெண்கள் பிரிவினர் அணிவகுப்பு மரியாதையுடன் அணிவகுப்பு மரியாதை முடிந்தது.
பின்னர் அண்ணா பதக்கங்கள், காந்தி பதக்கங்கள், வீர தீரச் செயல்களுக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். பின்னர் மோட்டார் சாகச அணிவகுப்பு உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அலங்காரக் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. பல்வேறு மாநிலப் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் கலைஞர்கள் அணிவகுத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், முக்கிய விருந்தினர்கள் ஊடகத்தினர் உள்ளிட்டோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவரவர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடைவெளி விட்டு அமரவைக்கப்பட்டிருந்தனர். வாகன ஊர்தி விழாவில் காவல்துறை வாகனத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT