Last Updated : 26 Jan, 2021 03:17 AM

 

Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

கூடுதல் பயன்கள் கிடைக்கும் வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: சீரமைப்பு சேர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; 2-வது இடத்தில் தமிழகம்

சென்னை

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அதிக பயன் கிடைக்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளதால், அதில் சேர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2.50 லட்சம் பயனாளிகளுடன் நாட்டிலேயே 2-ம் இடத்தில் தமிழகம் உள்ளது.

ஓய்வு காலத்தில் மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் 22.10 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில், 2.90 லட்சம் கணக்குகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 2.50 லட்சம் கணக்குகளுடன் தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன.

மூத்த குடிமக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் வகையில் இந்த சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு சீரமைத்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு கடந்த 2004-ல் தொடங்கிய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை கடந்த ஆண்டு சீரமைத்து புதிய விதிகளை வகுத்துள்ளது. அஞ்சலகம், வங்கிகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 60 வயது நிறைவடைந்தவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

சீரமைக்கப்பட்டுள்ள புதிய விதியின்படி, பணிபுரிபவர்களை பொருத்தவரை 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களும், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் 50 வயதிலும் இக்கணக்கை தொடங்கலாம். அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு 6.6 சதவீத வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த சேமிப்பு கணக்குக்கு 7.4 சதவீத வட்டி, அதாவது கூடுதலாக 0.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். ஆனால், அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதே நேரம், கணவன், மனைவி இருவரும் இணைந்து தொடங்கும் சேமிப்பு கணக்கில், இருவரும் தனித்தனியாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு, ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி வழங்கப்படும்.

டெபாசிட் செய்த நாளில் இருந்துஓராண்டுக்குள் கணக்கை முடித்துக்கொண்டால், அதுவரை வழங்கப்பட்ட வட்டித் தொகையை டெபாசிட் தொகையில் இருந்து கழித்து, எஞ்சிய தொகை வழங்கப்படும்.

உதாரணமாக, ஒருவர் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால், அவருக்கு ஆண்டொன்றுக்கு 7.4 சதவீத வட்டி வீதத்தில், காலாண்டுக்கு ஒருமுறை ரூ.12,333 வட்டி வழங்கப்படும். டெபாசிட் செய்த பிறகு 10 மாதத்துக்குள் ரத்து செய்தால், அவருக்கு 3 காலாண்டுக்கு வட்டித் தொகையாக ரூ.36,999 வழங்கப்பட்டிருக்கும். டெபாசிட் தொகையை அவர் திரும்ப பெறும்போது ரூ.5 லட்சத்தில் ரூ.36,999-ஐ கழித்து ரூ.4.63 லட்சம் திரும்பக் கிடைக்கும்.

அதேநேரம், இந்த வட்டித் தொகையை எடுக்காமல் டெபாசிட் கணக்கிலேயே வைத்திருந்தால், அந்த தொகையை மட்டும் கழித்துவிட்டு முழு டெபாசிட் தொகையான ரூ.5 லட்சம் திருப்பி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேரும் மூத்த குடிமக்கள் டெபாசிட் தொகை முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக இறந்துவிட்டால், உரிய வட்டியுடன் தொகை திருப்பி வழங்கப்படும். அத்துடன், இறந்த தேதியில் இருந்து கணக்கு முடிக்கப்படும் தேதி வரை சாதாரண சேமிப்பு கணக்குக்கு உரிய வட்டியும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுத் தொகையில், ரூ.1.5 லட்சம் வரையிலான தொகைக்கு வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படும். எனினும், முதலீடு மூலம் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி உண்டு. இருப்பினும், வருமான வரி பிரிவு 8 டிடிபி-யின் கீழ் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி சலுகை கிடைக்கும். படிவம் 15-எச் சமர்ப்பிப்பதால், ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு பெறலாம்.

மொத்தத்தில், இத்திட்டத்தில் சேரும் மூத்த குடிமக்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் மிகவும்பயன் அளிப்பதாக உள்ளது. இதன் காரணமாக, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x